அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

May 15, 2026 - 23:02
0
அடுத்தடுத்து இரண்டு கொலைகள்; நாகையில் பரபரப்பு - நேரில் ஆய்வு செய்த எஸ்.பி!

நாகப்பட்டினத்தில் வெவ்வேறு இடங்களில் மீனவர் மற்றும் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை ரயில் நிலையம் அருகே உள்ள அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் அருண் (38). இவர் கேரளாவில் தங்கி மீன்பிடித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தாயின் இறப்பிற்கு இறுதிச்சடங்கு செய்ய நாகை வந்துள்ளார்.

மீன்பிடிக்க தடைக்காலம் என்பதால் நாகையிலேயே தங்கியும் உள்ளார். இந்நிலையில் தான் நேற்றைய தினம் நாகை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிற்கும் பிளாட்பாரத்தில் ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொரு சம்பவமானது, நாகை அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கீழ்வேளூரைச் சேர்ந்த சித்ரா (40) என்பவர் ரத்தக் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர், மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு தாக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இரண்டு கொலை சம்பவங்களுமே அரசு மருத்துவமனையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

இந்தக் கொலைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நடந்த அடுத்தடுத்த கொலைச் சம்பவங்கள் நாகை மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User