TNPSC: காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி

Jun 16, 2026 - 12:30
0
TNPSC: காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திற்கு 2012 ஆம் ஆண்டில் ரூபாய் 5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 3843 பகுதிநேரமாக ஆசிரியர்கள் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றார்கள்.

திமுக வாக்குறுதி
திமுக வாக்குறுதி

15 ஆண்டுகளாக தற்காலிகமாகப் பணிபுரிகின்றபோதும் இதுவரை காலமுறை ஊதியத்தை மாற்றி நிரந்தரமாக்காமல், தற்போது ரூ. 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. முந்தைய 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியிலும் அடுத்து வந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியிலும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு செய்யவில்லை.

இந்த நிலையில் தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிமாகப் பணியாற்றிய ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதை நம்பி உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, வாழ்க்கைக்கல்வி, கட்டடக்கலை, தோட்டக்கலை பாடங்களில் பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்கள், 11,773 பேரையும் முதல்வர் விஜய் நிரந்தரமாக்குவார் எனக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இந்த நிலையில் பள்ளிகல்வித்துறையில் தற்போது 1328 உடற்கல்வி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தி நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் 3843 உடற்கல்வி பாட பகுதிநேர ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

பல ஆண்டுகளாக உடற்கல்வி பாடத்தில் மாணவர்களை ஊக்குவித்து வருகின்ற பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை நிரந்தரமாக்கிய பிறகே காலிப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே தங்களுக்கு எதிர்காலம் கிடைக்கும் என்பதே பகுதிநேர ஆசிரியர்களின் தரப்பில் கோரிக்கை எழுந்து வருகிறது.

எனவே பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடங்களில் தற்காலிகமாக 15 ஆண்டுகளாகப் பணிபுரிகின்ற 3843 பேரை நிரந்தரமாக்கி தமிழக அரசுப் பணிக்கு ஈர்த்து கொள்ள வேண்டும். மேலும் உடற்கல்வி பாடத்தைப் போலவே, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, வாழ்க்கைக்கல்வி, கட்டடக்கலை, தோட்டக்கலை பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களையும் சேர்த்து மொத்தம் 11,773 பேரையும் நிரந்தரமாக்க வேண்டும்.

தவெக தேர்தல் அறிக்கையில் தற்காலிகமாகப் பணியாற்றுகின்ற ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்திருப்பவர்கள் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். எனவே 11,773 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்கி தவெக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User