”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” - குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

Jun 18, 2026 - 10:32
0
”தவெக-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை” - குற்றம் சாட்டும் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறையின் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “சிங்கப்பெண் படையில் உள்ள பெண் காவலர்களின் நகைகளே திருடப்பட்டுள்ளன. அந்தப் படையில் உள்ள காவலர்களே பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.

சிங்கப்பெண் படை என்பது வெறும் பெயரளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக புகார் அளிக்க பல்வேறு அவசர உதவி எண்கள் உள்ளன.

கீதாஜீவன்
கீதாஜீவன்

அந்த உதவி எண்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள பெண் காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால்தான் நன்றாக இருக்கும். தற்போது கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தச் சிங்கப்பெண் படை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் சீண்டல்களை இந்த த.வெ.க அரசு மறைக்கிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் த.வெ.கவைச் சேர்ந்த இளம்பெண்ணை அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியே கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளார். அந்தச் சம்பவத்தில் பஞ்சாயத்து செய்த ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ சரவணனை முதல்வர் விஜய் அழைத்து கண்டித்தாரா?

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையே கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். புகார் அளித்த அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுகின்றனர். சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் தமிழகத்திலுள்ள பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? தமிழகத்தின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது முதல்வர் விஜய்க்கு தேர்தலுக்கு முன்பு தெரியாதா?

கீதாஜீவன்

தேர்தலுக்கு முன்பு நடந்த பிரசாரத்தின் போது, 'தமிழகத்தின் நிதி நிலைமையைச் சீராக்கிட நாங்கள் பல ரகசிய திட்டங்கள் வைத்துள்ளோம். சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் எனச் சொன்னார்களே. அந்த ரகசியத் திட்டங்கள் என்னென்ன? மக்கள் எந்தக் கேள்வியையும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டதுதான் அந்த வெற்று அறிக்கை” எனக் கூறியுள்ளார்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User