அவையில் உதயநிதி வைத்த கோரிக்கை.! `கூடுதல் பத்தியாகச் சேர்க்கலாம்' - உடனே ஓகே சொன்ன முதல்வர் விஜய்!
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கட்டுவதற்கு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார். அந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
நீண்ட நாள்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண தமிழ்நாடு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வு தொடங்கியது. இந்த அமர்வில் மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பிறகு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, ``அரசின் தனித் தீர்மானத்திற்குத் தங்களது ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து, ஆதரவு வழங்கிய அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, இந்த அரசின் தனித் தீர்மானத்தில் ஒரு முக்கியக் கருத்தைச் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார். அது குறித்து ஒரு விளக்கமளிக்க வேண்டும் என விரும்புகிறேன். மேகதாது அணைப் பிரச்னை சம்பந்தமாக, எனது தலைமையில் கடந்த 26.05.2026 அன்று விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேகதாது பிரச்னைக்காகப் பிரத்தியேகமாகத் தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் அன்றைய தினம் ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில், தனி நடுவர் மன்றம் அமைப்பதற்குத் தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் ஏற்கனவே தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, எதிர்க்கட்சித் தலைவரால் முன்வைக்கப்பட்ட அந்தக் கருத்தினை, தற்போதுள்ள தீர்மானத்தின் நான்காவது பத்திக்கு அடுத்து, ஒரு கூடுதல் பத்தியாகச் சேர்க்கலாம் என பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)