தஞ்சை திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்: கண்பார்வைக் குறைபாடுகள் நீக்கும் சுக்கிரன் தலம்!

Mar 14, 2026 - 08:30
 0
தஞ்சை திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்: கண்பார்வைக் குறைபாடுகள் நீக்கும் சுக்கிரன் தலம்!

நவகிரகங்களில் குருபகவான் தேவகுரு என்றால், சுக்கிரன் அசுர குரு. இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். 64 கலைகளுக்கும் அதிபதி. அதிகாலை உதயமாகி வானில் ஒளிவீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுவர். ஜோதிடத்தின்படி, ஒரு மனிதன் வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடிய சுகங்களையும், சொகுசான வசதிகளையும் தரக்கூடிய கிரகமாகச் சுக்கிர பகவான் குறிப்பிடப்படுகிறார். காதல், அன்பு, பாசம், ஆசை போன்ற உணர்வுகளுக்கும் சுக்கிரனே மூலகாரகன். சுக்கிரனை களத்திரகாரகன் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இல்லறம் எனும் நல்லறத்தில் நம்மை இணைய வைப்பது கல்யாணம். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, களத்திர காரகன் சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்கிறாரா என்பதைப் பார்த்து முடிவு செய்வார்கள். சுக்கிரனின் அருளிருந்தால் ஒருவர் சுகவாழ்வு வாழலாம். அப்படிப்பட்ட சுக்கிரனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும் தலங்களில் ஒன்று திருவெள்ளியங்குடி.

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்

கும்பகோணத்திலிருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி. சுக்கிரன் பெருமாளை வழிபட்டு அருள்பெற்ற புண்ணிய க்ஷேத்திரம்.

மூலவர் அருள்மிகு க்ஷீராப்திநாதர். சயனக்கோலத்தில் அருள்கிறார். அவரின் தலைமாட்டில் மார்க்கண்டேய மகரிஷியும், கால்மாட்டில் பூதேவியும் தரிசனம் தருகிறார்கள். இவரையே ராமபிரானாக தரிசித்து மகிழ்ந்து, ‘கோலவில்லி ராமர்’ என்கிற பெயரில் மங்களாசாசனம் செய்தார் திருமங்கை ஆழ்வார். உற்சவரின் திருப்பெயர் சிருங்கார சுந்தரர். தாயாரின் திருநாமம் மரகதவல்லித் தாயார். அசுரகுலச் சிற்பி மயனால் எழுப்பப்பட்ட ஆலயம் இது என்கின்றன புராணங்கள். இங்கே பார்வைக் குறைபாடுகளை அகற்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் எம்பெருமான்.

இந்தத் தலத்தில் சங்கும் சக்கரமும் இல்லாமல் அருள்பாலிக்கிறார் பகவான். கருடாழ்வார் பெருமாளின் சங்கு - சக்கரங்களைத் தாங்கியபடி ஒரு காலை மண்டியிட்டு, மற்றொன்றை குத்துக்காலிட்டபடி எழுந்தருளியிருக்கிறார்.

காரணம், அசுரகுலச் சிற்பியான மயனின் தவத்தாலும் பிரார்த்தனையாலும் மகிழ்ந்த மகாவிஷ்ணு, சங்கு சக்ரதாரியாக அவனுக்குக் காட்சியளித்தார். அவனோ, `கல்யாணக் கோலத்தில் காட்சிதர வேண்டும்’ என்று பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் தமது சங்கு- சக்கரங்களைக் கருடனிடம் கொடுத்துவிட்டு, மணக்கோலத்தைக் காட்டியருளினாராம். மேலும் இங்கே பூமிதேவி, பிரம்மன், இந்திரன், மார்க்கண்டேயர், பராசரர், சுக்கிரன், மயன் முதலானோர் வழிபட்டு பெருமாளின் தரிசனமும் திருவருளும் பெற்றுள்ளார்கள்.

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்

பெருமாள், வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் தானம் வேண்டி வந்தார். அவருக்குத் தானம் வழங்குவதைத் தடுக்க நினைத்தார் சுக்ராச்சார்யர். எனவே, ஒரு வண்டாக உருவெடுத்து வந்து, மகாபலியின் கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேறும் துவாரத்தை அடைத்துக்கொண்டார். அதை அறிந்த பகவான், தர்ப்பைப்புல்லை எடுத்து, கமண்டல துவாரத்தில் நுழைத்துக் கிளறினார். அதனால், சுக்கிராசார்யரின் பார்வை பறிபோனது.

தன் தவற்றை உணர்ந்து வருந்திய சுக்கிராசார்யர் இந்தத் தலத்துக்கு வந்து இந்திர தீர்த்தத்தில் நீராடி, ஒரு மண்டல காலம் தவமிருந்து பெருமாளை வழிபட்டு, கண்ணொளி பெற்றதாகச் சொல்கிறது தல புராணம். இந்த அற்புதத்தைக் குறிக்கும் வகையில், இன்றைக்கும் இந்த ஆலயத்தில் அணையா விளக்கு (நேத்திர தீபம்) சுடர்விடுவதைக் காணலாம்.

வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயத்துக்குச் சென்று, கோலவில்லி ராமரையும் மரகதவல்லித் தாயாரையும் தரிசித்தால் சுக்கிர தோஷம் விலகும்; அவரால் ஏற்படக்கூடிய பலன்கள் பெருகும். மேலும், கருவறையில் அணையா விளக்காகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தீபத்தில் சேர்க்க நல்லெண்ணெய் வழங்கலாம். இதனால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். தடைகள் நீங்கி கல்யாணம் கூடிவரும். குழந்தை இல்லாத தம்பதியருக்குப் பெருமாள் அருளால் குழந்தைச் செல்வம் வாய்க்கும் என்கின்றன ஞானநூல்கள்.

திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் கோயில் கருடன்

அதேபோல் 48 நாள்கள் தொடர்ந்து இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கண் பார்வைக் குறைபாடுகள் நீங்கும் என்பது ஐதிகம். சங்கு, சக்கரத்துடன் காட்சிதரும் கருட பகவானை வணங்கி வழிபட்டுச் சென்றால், வாகன விபத்துகள் நேராது. இங்குள்ள யோக நரசிம்மரை பிரதோஷ நாளில் வந்து வணங்கினால், சகலவிதமான நோய்களும் தீரும்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை திருவெள்ளியங்குடிக்குச் சென்று வாருங்கள். பெருமாளின் திருவருளால் உங்கள் வாழ்வும் உங்கள் பிள்ளைகளின் வாழ்வும் ஒளிமயமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0