தெலங்கானா: "தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பினால் அபராதம்"- கவனம் ஈர்க்கும் கிராம மக்கள் தீர்மானம்

Jun 08, 2026 - 10:01
0
தெலங்கானா: "தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பினால் அபராதம்"- கவனம் ஈர்க்கும் கிராம மக்கள் தீர்மானம்

"தங்கள் கிராமத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது" என்று மக்கள் எல்லோரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி எடுத்துள்ளது, தெலங்கானா மாநிலத்தில் கவன ஈரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறுதிமொழி எடுத்த மக்கள்

தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்திலுள்ளது பாபாபூர் கிராமம். விவசாயத்தை மட்டும் நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள். சமீபகாலமாக தங்கள் பிள்ளைகளை உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்க்காமல் அருகாமை நகரங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசையைத் தூண்டும் விளம்பரங்களைப் பார்த்து சேர்த்து வருவதால், உள்ளூர் அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதுதான் சிறந்தது, கௌரவம் என நினைத்து வசதியானவர்கள் மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களும் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைத்ததால் பலர் கடன்காரர்களாக மாறி அவர்களின் வாழ்க்கைத் தரம் மோசமானது. அதனால் கிராமத்தில் பல பிரச்னைகளும் உருவானது.

இதற்கு ஒரு முடிவுகட்ட நினைத்த பாபாபூர் ஊராட்சித் தலைவி லட்சுமியும், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதாவும் ஆலோசித்து ஊர் மக்களை அழைத்து கூட்டம் நடத்தினர். அதில் அரசுப் பள்ளியால் கிடைக்கும் சாதகங்கள், தனியார் பள்ளியால் ஏற்படும் பாதகங்களை எடுத்துச் சொன்னதை புரிந்துகொண்ட கிராம மக்கள், அரசுப் பள்ளியில்தான் பிள்ளைகளை சேர்க்க வேண்டும், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

அது மட்டுமின்றி இந்த முடிவிற்கு கட்டுப்படுவதாக கிராம மக்கள் அனைவரும் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஏற்கெனவே தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் நிறுத்தப்பட்டு அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து தனியார் பள்ளி வாகனங்களை ஊருக்குள் விடாமல் ஊர் எல்லையிலேயே தடுத்து திருப்பி அனுப்பினர். இந்த தகவல் மாநிலம் முழுவதும் பரவி பல அமைப்பினரும் பாபாபூர் மக்களை பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து தலைமையாசிரியை சுஜாதா செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசே, சீருடை, புத்தகங்கள், மதிய உணவு உள்ளிட்ட பல வசதிகளை வழங்கிறது. பள்ளிகளின் உள்கட்டமைப்பும் சிறப்பாக உள்ளது. அதுமட்டுமன்றி தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழிக் கலவி, கணினி மற்றும் நவீன தொழில்நுட்ப கல்வியும் கற்றுத்தரப்படுகிறது. இப்படியுள்ள நிலையில், தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக தங்கள் சொத்துக்களை விற்று பெற்றோர்கள் தெருவுக்கு வரும் நிலை ஏற்படுள்ளது. எனவே பெற்றோர்களை தனியார் பள்ளி மோகத்தில் இருந்து மீட்கவும், அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் கிராம மக்களுக்கு புரியவைத்து அவர்களின் துணையோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

பாபாபூர் அரசுப்பள்ளி

பாபாபூர் மக்களின் அதிரடி முடிவு பல்வேறு ஊர்களுக்கும் பரவியதால், தற்போது இன்னும் பல கிராமங்களில் இதுபோல தனியார் பள்ளிகளுக்கு எதிராக தீர்மானம் இயற்ற முடிவு செய்து வருவதாக தகவல் வருகிறது.

அதே நேரம், தங்கள் குழந்தைகளுக்கு எந்தப் பள்ளியைத் தேர்வு செய்வது என்கிற உரிமை பெற்றோருக்கு உள்ளது, இப்படி கட்டாயப்படுத்துவது சட்டப்படி சரியானதா? என்ற விவாதமும் தெலங்கானா கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மத்தியில் எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User