தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

Oct 13, 2026 - 17:31
0
தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க - வேலுமணி & டீம் ஆபரேஷன்!

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன் விளைவாக, மே மாதத்தில் கையிலெடுத்த ஆபரேஷனை மீண்டும் புதுப்பிக்கத் தயாராகி வருகிறது வேலுமணி& சி.வி.சண்முகம் டீம்

இதன்மூலம், தி.மு.கவை எதிர்த்து அ.தி.மு.கவை உள்வாங்கும் திட்டத்தில் மீண்டுமொருமுறை வெற்றி பெற்றிருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்.

கடந்த முப்பதாண்டுகளாக தமிழ்நாட்டின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியாக மட்டுமே பவனிவந்த அ.தி.மு.க நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 47 இடங்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து, 107 இடங்களுடன் பெரும்பான்மைக்காக போராடிக்கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் பங்கேற்கலாம் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

அதற்கு அவர் உடன்பட மறுக்கவே, முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களோடு தனி அணியாக உருவெடுத்தனர். த.வெ.க அரசுக்கு ஆதரவளித்ததோடு, அமைச்சரவையில் பங்கேற்கும் ஆலோசனைகளும் நடத்தப்பட்டன. ஆனால், சட்டரீதியான நெருக்கடிகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட, எம்.எல்.ஏ பதவியைத் தக்க மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இணைந்தனர்.

ஆனாலும், பறிக்கப்பட்ட பொறுப்புகளைக் கொடுக்காதது, கட்சிக்குள் முக்கியத்துவத்தைக் குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், அவ்வப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதங்கள் எழுதி கலகம் செய்து வந்தனர். அந்த நேரத்தில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உற்சாகமானார் எடப்பாடி பழனிசாமி.

இரண்டில் ஒன்று, குறிப்பாக தாராபுரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டாலே போதும் கரையும் கட்சியைக் காப்பாற்றிவிடலாம் எனவும் கணக்குப் போட்டார். ஆனால், இரண்டு தொகுதியிலும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை மீண்டுமொருமுறை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து ஒருவரின் தலைமைப்பண்பை முடிவு செய்ய முடியாதுதான். ஆனால், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் குறித்துஅடிப்படையைத் தெரிந்துகொண்டால், அப்படி நாம் எளிதில் கடக்கமுடியாது என்பதுதான் அரசியல் விமர்சகர்கள் கருத்தாக இருக்கிறது.

`` அ.தி.மு.க எனும் கட்சித் தொடங்கப்பட்ட பிறகு நடந்த 12 பொதுத் தேர்தல்களில் ஏழு முறை மதுராந்தகத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. 1989-ல் ஜா, ஜெ அணியாக அ.தி.மு.க பிளவுபட்டிருந்த போதும் வெற்றிபெற்ற அ.தி.மு.க வாக்காளர்கள் நிறைந்த தொகுதி மதுராந்தகம். 2021 தேர்தலில், சென்னை மண்டலத்தில் இருந்த 37 தொகுதிகளில் 36 தி.மு.க வெற்றிபெற, மதுராந்தகத்தில் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

2026 தேர்தலில் ஆளும்கட்சியின் அசுர கூட்டணி பலம், விஜய் எனும் பிம்பத்துக்கு நடுவே வெற்றி பெற்றார் மரகதம். ஆனால், இப்போது வெறும் 47 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது.

எடப்பாடி பிரச்சாரம்

அப்படியே தாராபுரத்தை எடுத்துக்கொண்டாலும், 1977 க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அ.திமு.க 7 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, 1977 எம்.ஜி.ஆர் அ.தி.மு.க எனும் கட்சியைத் தொடங்கி சந்தித்த முதல் பொதுத் தேர்தல்.

ஆனால், அதற்கு முன்பாகவே, திண்டுக்கல் நாடாளுமன்றம், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை என்கிற பிரசாரம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தாராபுரம் தொகுதியில் மட்டுமே எம்.ஜி.ஆர் ஆசி பெற்ற சின்னமாக சிங்கம் இருந்தது. காரணம், எம்.ஜி.ஆர் முதலில் அந்தத் தொகுதிக்கு அய்யசாமி என்பவரை வேட்பாளராக அறிவித்து பின்னர் அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை மாற்றினார்.

ஆனால், ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி முதலில் அவருக்கு அனுப்பப்பட்டதால் அதை வைத்து அவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய அவருக்குச் இரட்டை இலைச் சின்னம் கிடைத்து விட்டது. அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம்தான் கிடைத்தது

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அய்யசாமியை பிரசாரத்துக்குச் செல்லக்கூடாது என உத்தரவிட்டார். அவர் தொகுதியை விட்டே வெளியேறிவிட்டார். எம்.ஜி.ஆர் சிங்கம் சின்னத்துக்குத்தான் வாக்குக் கேட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் ஆதரித்த பாலகிருஷ்ணன் மூன்றாவது இடத்துக்குத்தான் வந்தார். அந்தளவுக்கு இரட்டை இலைச் சின்னத்தின்மீது அபிமானம் கொண்ட மக்கள் வசிக்கும் தொகுதி அது. ஆனால், 2026 தேர்தலில் பெற்றதைவிட, கிட்டத்தட்ட 35 ஆயிரம் வாக்குகள் இப்போது குறைவாகக் கிடைத்திருக்கிறது. இது சாதாரண சறுக்கல் அல்ல'' என்கிறார்கள்.

2026 பொதுத் தேர்தலைப் போல இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலை முதல்வர் விஜய் கையாளவில்லை. நான்கு நாள்கள் அவர் செய்த மிகத் தீவிரமான பிரசாரம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை முன்வைத்த கோஷமும் வெற்றியடைந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள்,

``தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க மூன்றாம் இடம் வந்ததற்கு பா.ம.க ஆதரவை விலக்கிக் கொண்டது, சரியான திட்டமிடல் இல்லாதது, உள்ளடி வேலைகள் மட்டுமே காரணமல்ல. அதையும்தாண்டி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகள், இரட்டை இலைச் சின்ன அபிமானிகள் முதல்வர் விஜயையும் விசில் சின்னத்தையும் தங்களின் ஆதர்சமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

தாராபுரத்தில் விஜய்

அதற்கான அறிகுறியே இரண்டு தொகுதியிலும் அ.தி.மு.க வாக்குகள்தான் பெருமளவில் த.வெ.கவுக்குச் சென்றிருக்கிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலுவின் களப்பணி, தாராபுரத்தில் அ.தி.மு.கவிலிருந்து சென்றவர்களின் தேர்தல் பணியும் ஒரு காரணம்தான். ஆனால், அதையும் தாண்டி, தி.மு.கவை எதிர்த்து வெற்றிபெறும் ஆற்றல், த.வெ.கவுக்குத்தான் இருக்கிறது என அ.தி.மு.க வாக்காளர்கள் கருதத் தொடங்கிவிட்டனர்.

எடப்பாடி பழனிசாமியின் மீது நம்பிக்கையை இழந்திருக்கின்றனர். அ.தி.மு.க நிர்வாகிகள் த.வெ.கவுக்குச் செல்வது அதன் கட்டுமானத்தை சீர்குலைக்கும் என்றால், தொண்டர்களும் வாக்காளர்களும் செல்வது அதன் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்துவிடும். தென் மாவட்டங்களில் அது ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. தற்போது கொங்குப் பகுதியிலும் நிகழ்ந்திருப்பது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது '' என்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வெளிப்படையாகத் தயாராகியிருக்கின்றனர் வேலுமணி & டீம். முதற்கட்டமாக வேலுமணி இல்லத்தில் கடந்த மூன்று நாள்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ''விரைவில், மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்களோடு த.வெ.கவை ஆதரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்கள்'' என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

``எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுமானால், இந்தத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் ஒன்பதாம் தேதி தெரிந்திருக்கலாம். ஆனால், எஸ்.பி.வேலுமணிக்கும் சி.வி.சண்முகமுகத்துக்கும் முன்பாகவே தெரியும். களத்தில் அவர்கள் தரப்பு ஆட்கள் சூழலை அவ்வப்போது அப்டேட் செய்தார்கள். அ.தி.மு.கவுக்கு எதிராகவும் வேலை பார்த்தனர்.

சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி

தேர்தல் நேரத்தில் பல அ.தி.மு.க நிர்வாகிகளை வேலுமணியே த.வெ.கவுக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமல்ல, தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பல எம்.எல்.ஏக்களைத் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தைகளையும் தொடங்கிவிட்டார்கள். ஏற்கெனவே 19 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களையும் இழுக்க முயற்சி செய்கிறார்கள்.

மூன்றில் இரண்டு பங்கு அதாவது 28 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிட்டால் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்குவார்கள். முதற்கட்டமாக பொதுக்குழுவைக் கூட்டச் சொல்லி வலியுறுத்துவார்கள். ஏற்கெனவே, அ.தி.மு.கவும் த.வெ.கவும் வேறு வேறல்ல, இரட்டை இலையும் விசிலும் வேறு வேறல்ல என த.வெ.கவின் தலைவர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் முன்வைக்கும் முழக்கங்களுக்கு வலு சேர்க்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க எதிர் த.வெ.க என்கிற வியூகத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டது த.வெ.க. அதில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கவே, தங்களின் எதிர்காலத்தைக் கணக்கில்கொண்டு, ஆறு அ.திமு.க எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் தஞ்சமடைந்தனர்.

பல முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என மிகப்பெரிய பட்டாளம் அடுத்தடுத்து நடையைக் கட்டத் தொடங்கினர். ஆனால், தொண்டர்கள், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அபிமான வாக்காளர்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள் என மார்தட்டிக்கொண்டது எடப்பாடி பழனிசாமி & டீம். தாராபுரம், மதுராந்தகம் இடைத் தேர்தல் முடிவுகள் அந்த பிம்பத்தையும் உடைத்துச் சுக்கு நூறாக்கியிருக்கிறது.

இனி த.வெ.கவுக்குள் கரையும் அ.தி.மு.கவை எடப்பாடி பழனிசாமி எப்படித் தடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User