92 உலகக் கலைஞர்களுடன் சிம்போனி சாதனை! - லிடியன் நாதஸ்வரத்துக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!

Jun 12, 2026 - 11:02
0
92 உலகக் கலைஞர்களுடன் சிம்போனி சாதனை! - லிடியன் நாதஸ்வரத்துக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!

இளமைப் பருவத்திலேயே உலக அரங்கில் முத்திரை பதித்து வரும் இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரம், லண்டன் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவின் (London Symphony Orchestra) 92 உலகத்தரம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது இசைக் கருவிகளைக் கொண்டு தனது முதல் சிம்பனி ஆல்பமான "சிம்பனி நம்பர் 1 - நியூ பிகினிங்ஸ்" (Symphony No.1 - New Beginnings) என்பதை வெற்றிகரமாக இசையமைத்து, பதிவு செய்து முடித்துள்ளார்.

ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் உள்ளிட்ட பலருக்கு ஆர்கெஸ்ட்ரா கண்டக்டராக இருந்த புகழ்பெற்ற மேட் டங்க்லி (Matt Dunkley) இந்த சிம்பனியை வழிநடத்தியுள்ளார். லண்டனில் இந்த இசைப்பதிவை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய லிடியன் நாதஸ்வரத்திற்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர்களுடன் லிடியன் நாதஸ்வரம்
அமைச்சர்களுடன் லிடியன் நாதஸ்வரம்

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 6-ல் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற லிடியன் நாதஸ்வரத்தின் 1330 திருக்குறட்பாக்களுக்கான இசைச் சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ம.தி.மு.க தலைவர் வைகோ, தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னிஅரசு ஆகியோர், விடியற்காலையிலேயே சென்னை விமான நிலையத்திற்கு நேரில் வருகை தந்து, தமிழக மக்கள் சார்பிலும், இசை ரசிகர்கள் சார்பிலும் லிடியன் நாதஸ்வரத்திற்குப் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, ``அன்று இசைஞானி இளையராஜா லண்டன் சென்று சிம்பனி அமைத்தபோது, ஆசிய கண்டத்திலேயே அந்த சாதனையை யாரும் செய்ததில்லை. அவருக்குப் பிறகு, அதே பாதையில் பயணித்து மிகக் குறைந்த வயதிலேயே இந்த மாபெரும் சாதனையை லிடியன் நாதஸ்வரமும், அவரது சகோதரி அமிர்தவர்சினியும் நிகழ்த்தியுள்ளனர். தமிழ் இசைதான் உலக இசைகளுக்கெல்லாம் முதன்மையானது. நம் வாழ்வோடு கலந்த இசையில் சிகரங்களை எட்டப்போகும் லிடியனை வாழ்த்துகிறேன்" என்றார்.

அமைச்சர்களுடன் லிடியன் நாதஸ்வரம்
அமைச்சர்களுடன் லிடியன் நாதஸ்வரம்

இசை இளவரசனை..!

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ் மோகன், ``இந்த இசை இளவரசனை நினைத்து தமிழ்நாடே பெருமிதம் கொள்கிறது. எங்கள் மூத்த சகோதரர் வைகோ அவர்கள் கேட்ட மாத்திரத்திலேயே, 'அவர் கேட்கக் கூடாது; கட்டளையிட வேண்டும்' என்று கூறி, அவரது அன்பு கட்டளையை ஏற்று தமிழுக்காகவும், இந்த இசை மேதைக்காகவும் நாங்கள் ஓடோடி வந்துள்ளோம். மேலைநாட்டு இசை பொதுவாக மக்களிடையே சத்தமிடும். ஆனால், இந்த ஏழை நாட்டில் இருந்து சென்ற நம் தமிழ்நாட்டு குழந்தை, தனது இசையால் உலக மக்களை முத்தமிட்டு, தாலாட்டியுள்ளார். வருகிற ஜூன் 21-ம் தேதி, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இந்த ஆடியோ பிரீமியர் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவருக்குத் தேவைப்படும் அத்தனை உதவிகளையும் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராகக் காத்திருக்கிறது." என்றார்.

ஐயன் வள்ளுவர் இன்று இருந்திருந்தால்...

அமைச்சர் வன்னி அரசு, ``தமிழர்களுடைய தொன்மை இசை இன்றைக்கு உலகளவில் சென்று சிம்பனியாகப் பரிணமித்திருப்பது பெரும் வரவேற்புக்குரியது. எங்களது தலைவர் எழுச்சித் தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, காலையிலேயே இந்த இசை மேதையை வரவேற்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். 1330 திருக்குறட்பாக்களையும் எளிய முறையில் இசை மூலம் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு. ஐயன் வள்ளுவர் இன்று இருந்திருந்தால், தம்பி லிடியன் நாதஸ்வரத்திற்கு அவரே ஒரு குறள் படித்துப் பாராட்டியிருப்பார். இவருடைய இசைப் பயணம் மென்மேலும் உச்சிக்குச் செல்ல வாழ்த்துகிறோம்" என்றார்.

அமைச்சர்களுடன் லிடியன் நாதஸ்வரம் பெற்றோர்
அமைச்சர்களுடன் லிடியன் நாதஸ்வரம் பெற்றோர்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லிடியன் நாதஸ்வரம்,``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். இசைஞானி இளையராஜா அவர்களின் இசையைக் கேட்டு, அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள் தான் நாங்கள் அனைவரும். அவருடைய பாதையைப் பின்பற்றித் தொடர்வதோடு, அவரது இசை மரபைக் காப்பாற்ற வேண்டும் என்பதே நோக்கம். இந்த சிம்பனி ஆல்பத்தை உருவாக்குவதில் எனது தந்தை, தாய் மற்றும் அக்காவின் சப்போர்ட் அளப்பரியது.

லண்டன் இசைக்கலைஞர்கள் இந்த இசையைக் கேட்டுப் பாராட்டியது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்தச் சாதனையைத் தொடர்ந்து, வருகிற ஜூன் 21-ஆம் தேதி (உலக இசை நாள்) சென்னை மியூசிக் அகாடமியில் இந்த ஆல்பத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ஆடியோ பிரீமியர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும், அதிகாலை வேளையிலும் நேரில் வந்து வாழ்த்திய வைகோ, அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னிஅரசு மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை லிடியன் நாதஸ்வரம் குடும்பத்தினர் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User