“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

Oct 27, 2026 - 18:30
0
“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

தனது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிரவைத்த கையோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற அபிஷேக் ஷர்மா, தனது கிரிக்கெட் ஆசான் யுவராஜ் சிங்கின் சமூக வலைதள நகைச்சுவைக்கு கூலாக பதிலளித்திருக்கிறார். யுவராஜ் சிங்கின் 12 பந்து அரைசத சாதனையை முறியடிக்காதது குறித்து ஜாலியாக கிண்டலடித்ததற்கு, "அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை" என்று அபிஷேக் யதார்த்தமாகப் பேசியுள்ளது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

எளிமையான திட்டமே வெற்றிக்குக் காரணம்!

இந்த ஆட்டத்தில் தனது வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்டபோது, அபிஷேக் ஷர்மா மிகவும் எளிமையாக விளக்கினார். "எங்கள் திட்டம் மிகவும் எளிமையானது. நானும் வைபவும் பவர்பிளேவை முழுமையாக என்ஜாய் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஃபீல்டிங் செய்யும்போதே பிட்ச்சில் கூடுதல் பவுன்ஸ் இருப்பதை கவனித்தோம். மைதானத்தின் அளவுகளையும், பந்துவீச்சாளர்களின் வேகத்தையும் பவர்பிளேவில் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நம்பினோம். முதல் ஓவரிலேயே வைபவ் அருமையாகத் தொடங்கி, அணிக்குத் தேவையான உத்வேகத்தைக் கொடுத்தார். அந்த உத்வேகத்தைத் தக்கவைத்து ஆடியதே வெற்றிக்கு வழிவகுத்தது" என்று கூறினார்.

வெற்றிக்குப் பின்னால் இருக்கும் கடின உழைப்பு!

தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணி நிர்வாகமும், கேப்டனும் கொடுக்கும் சுதந்திரம் பற்றிப் பேசிய அபிஷேக், அது பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் கடுமையான உழைப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார். "இது அவ்வளவு எளிதானது என்று நான் கூற மாட்டேன். திரைக்குப் பின்னால் நாங்கள் செய்யும் தயாரிப்புகளே இதற்குக் காரணம். குறிப்பாக, எங்கள் பயிற்சியாளர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'சைடு ஆர்ம்ஸ்' மூலம் நாங்கள் நிறையப் பயிற்சி செய்தோம். ஒரு பேட்ஸ்மேனாக, களத்தின் சூழல், மைதானத்தின் அளவு மற்றும் பந்துவீச்சாளர்களின் திட்டங்கள் ஆகியவற்றை மனதில் வைத்து அதற்கேற்ப ஷாட்களை ஆட வேண்டும். நேற்றைய பயிற்சி முகாமில் நான் சிறப்பாகச் செயல்பட்டேன். அதை இன்றைய போட்டியில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன், அது நடந்தது" என்று தனது வெற்றிக்குப் பின்னணியில் உள்ள உழைப்பைப் பற்றித் தெரிவித்தார்.

யுவராஜின் கிண்டலுக்கு கூல் பதில்!

யுவராஜ் சிங், "12 பந்துகளில் அரைசதம் எனும் எனது ரெக்கார்டு இன்னும் உடைக்கபடவில்லை " என்று சமூக வலைதளத்தில் ஜாலியாக கிண்டலாகப் பதிவிட்டது குறித்துக் கேட்டபோது, அபிஷேக் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். "இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். அவர் அந்தக் காலத்தில் என்ன கிரிக்கெட் விளையாடினார் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இப்போது அது அவ்வளவு எளிதான காரியமாக அல்ல. எந்தவொரு பேட்ஸ்மேனும் களத்திற்குச் சென்று 12 பந்துகளில் 50 ரன்கள் அடித்துவிட முடியாது. அது எப்போதாவது ஒருமுறை நடக்கும் விஷயம். ஒரு பேட்ஸ்மேனாக, நாங்கள் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. அணிக்காக ஆட்டத்தை வெல்வதே எங்கள் முக்கிய நோக்கம். நானும், வைபவும் அதையே விரும்பினோம். இந்தத் தொடர் முழுவதும் இதே அணுகுமுறையைத் தொடர விரும்புகிறோம்" என்று முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.

தொடர்ந்து யுவராஜ் சிங் தனது பதிவில், `என்னால் 30 அல்லது 34 பந்துகளில் உன்னைப்போல் சதம் அடித்துவிட முடியாது" என அபிஷேக்கை மனம் திறந்து பாராட்டியும் இருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User