சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

Aug 13, 2026 - 17:31
0
சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழ்கிறது தென்காசி. இயற்கையும் ஆன்மிகமும் இணைந்த சுற்றுலாத் தலங்கள் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. குற்றாலம் அருவிகள், காசி விசுவநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், திருமலைக்குமாரசுவாமி கோயில், குண்டாறு அணை, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களைத் தொடர்ந்து, தற்போது சுந்தரபாண்டியபுரம் கிராமமும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தின் விவசாயப் பகுதிகளில் ஒன்றான சுந்தரபாண்டியபுரம், அதன் இயற்கை அழகாலும் பசுமையான வயல்வெளிகளாலும் மக்களின் கவனத்தைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் சாரல் சீசனில் இப்பகுதியின் அழகு மேலும் அதிகரிக்கிறது.

இந்த ஆண்டில் சுந்தரபாண்டியபுரத்தின் வயல்களில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் அந்தக் கிராமத்தின் அழகை மேலும் மெருகேற்றியிருக்கின்றன.

வயல் முழுவதும் மஞ்சள் நிறத்தில் விரிந்து காணப்படும் சூரியகாந்திப் பூக்கள், பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இயற்கை எழில் நிறைந்த இந்தக் காட்சியைப் புகைப்படங்களாகப் பதிவு செய்வதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் சுந்தரபாண்டியபுரத்திற்கு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், கேரள மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது. தென்காசிக்கு சுற்றுலா வரும் பலர் குற்றாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களைப் பார்வையிட்ட பின்னர் சுந்தரபாண்டியபுரத்திற்கும் வருகின்றனர்.

சூரியகாந்தி மலர்கள் பூத்துள்ள வயல்களுக்குள் நின்று புகைப்படம் எடுப்பது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது, இயற்கைக் காட்சிகளை ரசிப்பது என சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் முன்பு விவசாயக் கிராமமாக மட்டுமே அறியப்பட்ட சுந்தரபாண்டியபுரம் தற்போது புதிய புகைப்படச் சுற்றுலாத் தலமாக உருவெடுத்து வருகிறது.

சூரியகாந்தி மலர் சாகுபடியின் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகளையும் புகைப்படக் கலைஞர்களையும் ஈர்க்கும் வகையில் விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.

வயலுக்குள் சென்று புகைப்படம் எடுக்க விரும்புபவர்களிடம் தலா ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு சிறிய அளவிலான கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. விவசாயிகளின் இந்த முயற்சி, விவசாயத்தையும் சுற்றுலாவையும் இணைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

"தென்காசிக்கு வர டூரிஸ்ட் எல்லாருமே நம்ம ஊருக்கு போட்டோ எடுக்க வருவாங்க, நம்ம ஊருல நிறைய சினிமா படம், யூடியூப் ஷார்ட் ஃபிலிம்ஸ், போட்டோஷூட் எல்லாம் எடுக்குறதுக்கு வருவாங்க. இந்த வருஷம் சரியா மழை பெய்யல, அதிக லாபம் இருக்காது, அதனால போட்டோ எடுக்க வர்றவங்க கிட்ட 25 ரூபாய் வாங்குறோம், அந்த 25 ரூபாயையும் கட்டாயப்படுத்தி வாங்குறது இல்ல, விருப்பம் உள்ளவங்க கிட்ட வாங்கிப்போம் , தராதவங்க கிட்ட வாங்குறது இல்ல. போட்டோ எடுக்க வர்றவங்கள பாக்கும்போது ஒரு மன நிம்மதி கிடைக்குது" என்கிறார்கள் சூரியகாந்தி விவசாயிகள்.

"இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் சுற்றுலா தலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் புது இடங்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கின்றன. நம்ம ஊரை பத்தி சமூக வலைதளத்தில் அதிகமா பகிரப்படறதுனால, சுந்தரபாண்டியபுரத்தை பாக்கணும்னு ஆர்வத்தை மக்கள்கிட்ட ஏற்படுத்தி இருக்கு. இதை நினைக்கும்போது பெருமையா இருக்கு" என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் அருண்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User