எழுத்தாளர் இமையத்தின் கதை; சிங்கிள் ஷாட், சிங்கிள் கேரக்டர்! - விருதுகளை குவித்த சுயாதீனப்படம்

Mar 23, 2026 - 16:31
 0
எழுத்தாளர் இமையத்தின் கதை; சிங்கிள் ஷாட், சிங்கிள் கேரக்டர்! - விருதுகளை குவித்த சுயாதீனப்படம்

உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில்..ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்து ஆகாசத்தின் உத்தரவு' (An Order from the sky) என்ற சுயாதீனப் படம் (இன்டிபென்டன்ட் ஃபிலிம்) உருவாகியிருக்கிறது. சர்வதேச மற்றும் இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்களில் இப்படம் இடம்பெற்றிருக்கிறது, JARGAN திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான இப்படம் விருதையும் வென்றிருக்கிறது. எழுத்தாளர் இமையத்தை கதை இது. இப்படம் குறித்து அதன் இயக்குநர் கார்த்திக் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

படப்பிடிப்பில்

``என்னோட சொந்த ஊர் கோவையில் உள்ள அன்னூர். சினிமா ஆசையினால் 2008ல சென்னை வந்தேன். குறும்படங்கள் இயக்கியிருக்கேன். அதன்பின் 'கதிர்' என்கிற படத்துல இணை இயக்குநரா இருந்தேன். அங்கிருந்து சுயாதீன படங்கள் மீது ஆர்வம் வந்தது. ஆனந்த விகடன்ல வெளியான எழுத்தாளர் இமையத்தின் கதையை படிச்சதும் அதில் ஒரு வரி இருந்தது. ஒரு திருடன் இந்த சமூகத்திடம் 'நான் திருடன்னா.. அப்ப நீங்கள்லாம் யார்?' என்ற கேள்வியை எழுப்பியிருப்பார்ன்.

இந்த ஒருவரி என்னை ரொம்பவே பாதிச்சது. தவிர இந்தக் கதை ஒருத்தனை சுற்றியே அவன் இருந்த இடத்தை விட்டு வேற லொக்கேஷன் எங்கேயுமே போகல. இந்த கதையை ஒரே சிங்கிள் ஷாட்ல சொன்னால், அதில் உள்ள எமோஷனை உணர்வுகள் எங்கேயும் சிந்தாமல், சிதறாமல் கடத்திட முடியும்னு தோணுச்சு. இந்த கதையை பலரும் நாடகமாகவும் செய்திருக்காங்க. சின்ன பட்ஜெட்ல, இன்டிபென்டன்ட் படமாகவும் செய்திட முடியும்னு நம்பிக்கை வந்தது.

எழுத்தாளர் இமையம் சார்கிட்ட அனுமதி கேட்டதும், சந்தோஷமாக கொடுத்தார். அதன்பின் தயாரிப்பாளர் மகேஷ்வர பாண்டியன் கிடைச்சார். ஒரு கதை முழுவதையும் சிங்கிள் ஷாட்ல படமாக்குவது சிரமம்னா, அதை விட சிரமம் இந்த கதாபாத்திரத்திற்கான தகுந்த நடிகர் அமையறதும் சவால் தான். இந்த சூழல்ல கூத்துப்பட்டறையில் இருந்து பாஸ்கர் தேர்வானார். இந்த கதையில் லொக்கேஷனும் முக்கிய பங்கு வகிக்கும். புதுக்கோட்டை பக்கம் உள்ள வலைச்சேரிபட்டியில் ஒரு காளி கோவிலை பார்த்ததும், கதைக்கான இடமாக தெரியவே படப்பிடிப்பையும் அங்கேயே நடத்தினோம்.

எல்லாமே சிங்கிள் ஷாட் என்பதால், ஒளிப்பதிவாளர் விக்கேஷ் மலைசாமி, நடிகர் பாஸ்கர் இருவரையுமே அந்த லொக்கேஷனுக்கு அழைச்சிட்டு போய் சில மாதங்கள் ரிகர்சல் பார்த்தோம். அதன் பின்னரே ஷூட்டிங் கிளம்பினோம். படம் முழுவதுமே லைவ் சவுண்ட் தான் செய்திருக்கோம். பாலமுரளி பாலுவின் இசையும் கதைக்கு பலம் சேர்த்திருக்கு.

பாஸ்கர்

பார்த்திபன் சாரோட 'ஒத்த செருப்பு' படம் ஒரே கேரக்டர்னாலும் அது சிங்கிள் ஷாட் படம் கிடையாது. அந்த படத்துல 'கட்' ஷாட்கள் இருக்கும். ஆனா, 'இரவின் நிழல்' சிங்கிள் ஷாட்னாலும் அதில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து போகும். 'ஆகாசத்தின் உத்தரவு' அப்படியல்ல. அதனால்தான் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்லேயும், சர்வதேச புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்லேயும் one character in real time single shot என இடம் பெற்றிருக்கறது சந்தோஷமா இருக்கு.

கின்னஸ்லேயும் தகுதி பெறக்கூடிய படம்னு சொல்றாங்க. ஆனா, கின்னஸுக்கு அனுப்புறதுக்கு நிறைய பிராசஸ் இருக்கறதால அனுப்பாமல் இருக்கோம். முக்கியமான விஷயம், விருதுகள் வாங்கி குவிக்கணும், சாதனை படைக்கணும்னு சிங்கிள் ஷாட்ல எடுக்கல. ஒரு எளிய மனிதரின் உணர்வுகளையும் அவனோட மனநிலையிலேயே பிரதிபலிக்கணும்னு நினைச்சேன். இப்ப படமாக பார்க்கும் போது அதே உணர்வு உங்களுக்கும் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்குது'' என்கிறார் கார்த்திக் ராதாகிருஷ்ணன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0