இறக்கத்தில் பங்குச் சந்தை... மொத்த முதலீடு (Lump sum) இப்போது செய்யலாமா, கூடாதா?

Jun 03, 2026 - 15:34
0
இறக்கத்தில் பங்குச் சந்தை... மொத்த முதலீடு (Lump sum) இப்போது செய்யலாமா, கூடாதா?

இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியமான குறியீடான நிஃப்டி மீண்டும் 23000 புள்ளிக்களுக்குக் கீழே போகுமா என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த இறக்கம் ஏன் வந்திருக்கிறது, இந்த இறக்கம் இன்னும் தொடருமா, இந்த இறக்க நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன மாதிரியான முதலீட்டு யுக்தியைக் கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக, மொத்த முதலீட்டை மேற்கொள்ளலாமா என்கிற கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

பங்குச் சந்தை

ஏறி, இறங்கும் சந்தை... என்ன  காரணம்?

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததால், உலக அளவில் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டன. இந்தப் போர் ஒரு மாத காலம் மட்டும் நடந்து முடிந்துவிட்டாலும், ஈரானின் எல்லைப் பகுதியான ஹெர்மூஸ் நீரிணையத்தை மூடிவைத்ததால், கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்குக் கிடைக்கவில்லை. இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 115 டாலருக்கு மேல் சென்றது. இதனால் நிஃப்டி புள்ளிகள் 22500 வரை இறக்கம் கண்டது. ஆனால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையே சமரசப் பேச்சுவார்த்தை உருவானபின், பங்குச் சந்தை மீண்டும் உயரத் தொடங்கி, 24000 புள்ளிகள் வரை உயர்ந்தது.

ஆனால், அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான சமரசப் பேச்சுவார்த்தை முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் என்கிற அச்சம் மக்களிடம் மீண்டும் எழுந்துள்ளதால், உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகளும் இந்தியப் பங்குச் சந்தையும் இறக்கத்தின் போக்கில் இருக்கிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, 23200 என்கிற அளவில் வர்த்தகமாகும் நிஃப்டி, இந்தப் போர்ப் பதற்றம் இன்னும் சில நாள்களுக்கு நீடித்தால், 23000 புள்ளிகளுக்கும் குறைவாக செல்லுமோ என்கிற கேள்வி பிறந்துள்ளது. இதனால் சமீபத்தில் வந்த 22500 என்கிற நிலையைத் தொடுமா அல்லது அதற்கும் கீழே செல்லுமா எனப் பலரும் கேட்கத் தொடங்கி உள்ளனர்.

ஈரான் போர்

இறக்கம் எப்போது முடிவுக்கு வரும்?

அமெரிக்க - ஈரான் போர் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். அணுசக்தியைப் பயன்படுத்துவது உள்பட அமெரிக்கா விதிக்கும் பல்வேறு நிபந்தனைகளை ஈரான் ஒப்புக்கொள்ளக்கூடிய நிலையில் இல்லை. அமெரிக்காவுடன் போர் செய்து, ஜெயிக்க முடியாவிட்டாலும் ஹெர்மூஸ் நீரிணையத்தை மூடிவைப்பதன் மூலம் கச்சா எண்ணெய் உலகுக்குக் கிடைக்காமல் செய்து, அதன் மூலம் அமெரிக்காவுக்கு நிர்ப்பந்தத்தை உருவாக்க நினைக்கிறது ஈரான். இதனால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து, உலக அளவில் பணவீக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலையேற்றத்தால் அமெரிக்காவில் அதன் அதிபர் ட்ரம்பிற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த சில மாதங்களில் அவர் சார்ந்துள்ள கட்சியானது தேர்தலில் தோல்வி அடையும் நிலை உருவாகியுள்ளது. ஆக, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளிலும் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் எனில், அமெரிக்க - ஈரான் போரைக் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க - ஈரான் போர் நல்லதொரு முடிவுக்கு வந்து, ஹெர்மூஸ் நீரிணையம் மீண்டும் திறக்கப்பட்டால், கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; அப்போது இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் உயரும்.

அமெரிக்க - ஈரான் போர் இன்னும் பல ஆண்டுகள் நீடித்தால் என்ன செய்வது, பங்குச் சந்தை தொடர்ந்து இறங்கிக்கொண்டே போனால், என்ன என்றெல்லாம் கேட்கலாம். அமெரிக்க - ஈரான் போர் இனிமேலும் நீடிக்க நீடிக்க, அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அது பாதகம் என்பதால், போர் தொடர்வதற்கு அமெரிக்கா விரும்பாது; இதே போல, பங்குச் சந்தையும் இன்னும் சில நூறு புள்ளிகள் இறங்கலாமே தவிர, 22000, 21000, 20000 என்று இறங்கிக்கொண்டே செல்லாது. அப்படி இறங்குவதை உலகின் எந்த நாட்டு முதலீட்டாளரும் விரும்ப மாட்டார்.

முதலீடு
முதலீடு

மொத்த   முதலீடு செய்யலாமா...?

பங்குச் சந்தை ஏறக்குறைய 23000 புள்ளிகளுக்கு நெருக்கத்தில் வர்த்தகமாகி வருவது மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலம் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த பொன்னான ஒரு வாய்ப்பாகக் கருதலாம்.

சந்தை இறங்கியிருக்கும் இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் ஏற்கெனவே செய்துவரும் முதலீட்டை எந்த வகையிலும் நிறுத்தக் கூடாது. எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

ஆனால், தற்போது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குத் தேவை இல்லாத பணம் கையில் இருந்தால், அதை மொத்த முதலீடாக முதலீடு செய்வதற்கு அருமையான வாய்ப்பாகும். இதனால் குறைந்த என்.ஏ.வி.யில் அதிகமான யூனிட்டுகள் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும்.

இந்த மொத்த முதலீட்டை ஒரே நேரத்தில் மேற்கொள்ளாமல், கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. அதாவது, மொத்த முதலீட்டை முதலில் ஒரு டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஈக்விட்டி ஃபண்டுக்குக் கொண்டு சென்றால், சந்தை இறக்கத்தை நாம் இன்னும் சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட மாதிரி இருக்கும்!

ஆக, பங்குச் சந்தை கணிசமாக இறக்கம் கண்டுள்ள இன்றைய நிலையில் முதலீட்டாளர்கள் மொத்த முதலீட்டை மேற்கொள்ள நிச்சயம் பரிசீலிக்கலாம்!

முதலீட்டு   ஆலோசனை   வேண்டுமா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்... NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User