`சிவகார்த்திகேயனுக்கு படத்தை விளம்பரப்படுத்த பொருளாதாரம் இருக்கிறது, ஆனால்.!' - ஆரி ஆதங்கம்

Mar 2, 2026 - 16:32
 0
`சிவகார்த்திகேயனுக்கு படத்தை விளம்பரப்படுத்த பொருளாதாரம் இருக்கிறது, ஆனால்.!' - ஆரி ஆதங்கம்

நடிகர் ஆரி நடிப்பில் உருவான ‘ஃபோர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.

மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இப்படத்தை எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஃபோர்த் ப்ளோர்’  படம்
‘ஃபோர்த் ப்ளோர்’ படம்

இந்நிலையில் நடிகர் ஆரி இந்தப் படத்தை மால்கள் திரையிட மறுப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆரி, " ‘ஃபோர்த் ப்ளோர்’ படம் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

மால்களில் இந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுக்க மாட்டிகிறார்கள். சண்டை போட்டு தியேட்டர் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

காரணம் கேட்டபோது, நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை என்று சொல்கிறார்கள்.

‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள்.

தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு பொருளாதார வலிமையும், பொருளாதார சக்தியும் இருக்கிறது.

ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில், அவரால் இயன்றளவு செலவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறார்.

எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது புரியவில்லை.

நடிகர் ஆரி
நடிகர் ஆரி

எந்த படம் ஓட வேண்டும், ஓடக்கூடாது என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, இப்போது மால்களும் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன.

அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால், புதுமுகங்களும் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களும் எப்படி முன்னேறுவது?

தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது.

நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கப்படுகிறது.

மற்ற படங்களை புறக்கணிக்கிறார்கள். படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0