தகர்ந்த மகளிர் உலகக்கோப்பை கனவு; வெளியேறிய இந்தியா... அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா!

Jun 29, 2026 - 12:32
0
தகர்ந்த மகளிர் உலகக்கோப்பை கனவு; வெளியேறிய இந்தியா... அரையிறுதிக்குள் நுழைந்த தென்னாப்பிரிக்கா!

மகளிர் இருபது ஓவர் உலகக்கோப்பை இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தத் தொடரில் 'டாப் ஃபோர்' இடத்திற்காகக் கடும் போட்டி நிலவி வந்தது. முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் ஏற்கெனவே தங்களின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து தகுதி பெற்றிருந்தன.

நான்காவதாக அரையிறுதிக்குள் செல்லப்போவது சௌத் ஆப்பிரிக்கா அணியா? இந்திய அணியா? என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. 6 புள்ளிகளுடன் இருந்த இந்திய அணி, இன்னும் ஒரு போட்டியில் வென்றால் 'டாப் ஃபோர்' வாய்ப்பு நிச்சயம் என்ற சூழல் நிலவியது. இதனால் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இந்தியா போட்டி, இந்தியாவுக்கு 'டூ ஆர் டை' போட்டியாகவே அமைந்தது. வெற்றி பெற்றால் அரையிறுதிக்குச் செல்லலாம், இல்லையெனில் சௌத் ஆப்பிரிக்கா அணி தகுதி பெறும் என்ற உச்சக்கட்ட பதற்றத்துடன் இந்திய அணி களமிறங்கியது.

கிரிக்கெட்

வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த வாழ்வா, சாவா போரில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு தொடக்கமே அதிரடியாக அமைந்தது. ஸ்மிருதி மந்தனா 37 பந்துகளில் 38 ரன்களும், ஷஃபாலி வர்மா 26 பந்துகளில் 34 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்து பவர்பிளேயில் ரன்களைக் குவித்தது. நடுவரிசையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், அரைசதம் கடந்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. 68 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

கிரிக்கெட்

ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்காக எல்லிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லீ கார்ட்னர் ஜோடி இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். எல்லிஸ் பெர்ரி 38 பந்துகளில் 56 ரன்களும், ஆஷ்லீ கார்ட்னர் 29 பந்துகளில் 53 ரன்களும் குவித்து மிரட்டினர். இறுதியில், ஆஸ்திரேலியா 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 'டாப் ஃபோர்' கனவு முடிவுக்கு வந்து, தொடரை விட்டே வெளியேறியது. கடந்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, இருபது ஓவர் உலகக்கோப்பையை வெல்வதில் கோட்டை விட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User