இந்திய ATM-களில் பணப் பற்றாக்குறை; பணப் புழக்கத்தில் சிக்கலா? மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள்?
'இந்திய ஏ.டி.எம்-களில் பணத் தட்டுப்பாடு' - இது இன்று பிசினஸ் ஸ்டான்டர்டு நாளிதழில் வெளியாகிய முதல் பக்கக் கட்டுரை.
இந்தத் தகவலை ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பு (CATMI) இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (IBA) தெரிவித்துள்ளது.
அந்தக் கட்டுரையில் வெளியாகி உள்ள தரவுகள்...
> இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வங்கிக் கிளைகளில் இருந்து ஏ.டி.எம் ஆபரேட்டர்கள் பணம் பெறுவது பெரும்பாடாக உள்ளது.
> கடந்த மார்ச் மாதம், இந்திய ஏ.டி.எம்களுக்குக் கிட்டத்தட்ட ரூ.94,000 கோடி பணம் தேவையாக இருந்தது. ஆனால், கிடைத்தது என்னவோ ரூ.61,000 கோடி தான். ஏப்ரல் மாதம் இன்னும் குறைந்து ரூ.54,000தான் கிடைத்தது.

> மார்ச் மாதம் 64 சதவிகிதமாக இருந்த ஏ.டி.எம்-களுக்குத் தேவையான பணம், ஏப்ரல் மாதம் 57 சதவிகிதமாகக் குறைந்துவிட்டன.
> இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி, 2025-ம் ஆண்டு மே மாதம் 498.4 மில்லியனாக இருந்த பரிவர்த்தனைகள், கடந்த மே மாதம் 446.5 மில்லியனாக குறைந்துவிட்டன.
> 2025-ம் ஆண்டு மே மாதம் ரூ.2.64 டிரில்லியனாக இருந்து பணப் பரிவர்த்தனையின் மதிப்பு, இந்த மே மாதம் ரூ.2.5 டிரில்லியனாகக் குறைந்துள்ளது.
ஏ.டி.எம்களில் இந்தப் பணப் பற்றாக்குறைக்குக் கூறப்படும் காரணங்கள்...
> ஈரான் போரினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், ஏ.டி.எம்களுக்கு பணம் கொண்டு செல்ல ஆகும் செலவுகள் இன்னும் அதிகமாகிறது.
> ஏ.டி.எம் ஆபரேட்டர்களுக்கு ஆபரேஷனல் விலை அதிகமாகிறது.
> நம் நாடு முழுக்க முழுக்க டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது. அதனால், ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பது குறைந்துவிட்டது.
இந்தியாவிலேயே பணப் பற்றாக்குறை உள்ளதா?
இந்தக் கட்டுரையை மேலோட்டமாகப் படிக்கும் போது, ஏ.டி.எம்களில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிலேயே பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடலாம்.

உண்மை என்னவெனில், இந்தியாவில் பணப்புழக்கம் வழக்கத்தை விட அதிகமாகத்தான் ஆகியுள்ளது.
சில அறிக்கைகளின் படி, கடந்த மே 22-ம் தேதியில், இந்தியாவில் ரூ.42.54 டிரில்லியனுக்குப் பணப்புழக்கம் இருந்திருக்கிறது.
2025-ம் ஆண்டு மே மாதம் ரூ.41.26 டிரில்லியனாக இருந்திருக்கிறது. ஆக, ஓராண்டில் பணப்புழக்கம் அதிகரிக்கத்தான் செய்துள்ளது.
ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பு கூறுவது படி, இந்தியாவில் உள்ள ஏ.டி.எம்களில் லோட் செய்யப்படும் பணத்தின் அளவுதான் குறைந்திருக்கிறதே தவிர, பணப்புழக்கம் பாதிக்கப்படவில்லை.
அதுதான் பணப்புழக்கத்திற்குப் பிரச்னை இல்லையே... அப்புறம் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். அப்போது பணப்புழக்கமும் அதிகமாகும்.
மக்கள் கைகளுக்கு பணம் செல்லும் முக்கியமான ரூட் ஒன்று - ஏ.டி.எம். ஏ.டி.எம்களில் பணம் குறையும்போது, ஒரு கட்டத்தில் பணப்புழக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கிராமப்புறம், நகர்ப்புறங்களில் இன்னும் பலர் ஏ.டி.எம்களில் இருந்தே பணம் எடுத்து வருகிறார்கள். ஏ.டி.எம்களில் பணப் பற்றாக்குறை ஏற்படும் போது, இந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
'அதுதான் டிஜிட்டல் பேமென்ட் இருக்கிறதே' என்று பலர் நினைக்கலாம். ஆனால், இன்னும் சில பெரியவர்கள் ஆன்லைன் பேமென்ட் செய்ய தெரியாது என்பதே கண்கூடு.

அவர்களுக்கு பணம்தான் எளிய வழி. டிஜிட்டல் பேமென்டுகளை நோக்கி செல்லும்போது, இளைஞர்களுக்கான பெரிய 'ஷிப்ட்' ஒன்று நடக்கலாம். அதில் பெரியவர்களுக்கு இடம் இல்லாமலும் போகலாம்.
பேமென்ட்டிற்கு பெரியோர்கள் தங்களுடைய மகள், மகனை நம்பியே இருக்க வேண்டும். அவர்கள் இல்லாத இடத்தில் அருகில் இருக்கும் இளைஞர்களின் உதவியை நாட நேரிடலாம். ஆனால், அது பாதுகாப்பானதா என்கிற கேள்விக்கு நமக்கே பதில் தெரியும்.
இந்தச் சூழலில் பெரியவர்களிடம் 'பொருளாதாரப் பிடிப்பு' இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஏ.டி.எம்களில் பணம் குறையும்போது, டிஜிட்டல் பேமென்ட்களுக்குச் செல்வோம்தான். ஆனால், அதில் தினம் தினம் அப்டேட்டட் மோசடிகள் நடந்து வருகின்றன என்பது அனைவருக்குமே தெரியும்.
டிஜிட்டலை நம்பி செல்கையில், மோசடிகள் இன்னும் அதிகமாகும். நிதி பாதுகாப்பிற்கும் ஆபத்து.
இதில் இன்னொரு நுட்பமான விஷயம் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியப் பொருளாதாரத்திற்குச் சேமிப்பிற்குப் பெரிய இடம் இருந்தது. கடுகு டப்பாக்களில் கூட காசு சேர்த்தவர்கள் நம் அம்மாக்கள்.
ஆனால், டிஜிட்டல் நம் வாழ்க்கைக்குள் ஊடுருவ ஊடுருவ சேமிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. செலவுகள் அதிகம் செய்து வருகிறோம்.

முழுக்க முழுக்க பணம் பயன்படுத்தி கொண்டிருந்தபோது, பர்ஸில் இருந்து ஒவ்வொரு நோட்டு குறையும்போது, ஒரு அலர்ட் நமக்குள் எட்டிப் பார்க்கும். அதனால், செலவுகளைப் பார்த்து பார்த்து செய்வோம். கைகளிலும் ஓரளவு காசு மிஞ்சும்.
ஆனால், ஆன்லைன் பேமென்டுகளில் பணம் கிளிக்குகளில் செல்வதால், எத்தனை ரூபாய்யைச் செலவளித்துவிட்டோம் என்பது தெரியாமலே போய்விடுகிறது.
இதனால், மாதக் கடைசியில் அல்ல... மாதத்தின் முதல் 10 நாள்களிலேயே பணம் காலியாகி விடுகிறது.
ஏ.டி.எம்களில் பணம் குறையும் போது, நம்மிடையே சேமிப்பும் குறையும் என்பது மறைமுகப் பாதிப்பு.
அப்போது இந்தியா டிஜிட்டல் மயத்தை நோக்கி நகரக் கூடாதா என்று கேட்டால், நிச்சயம் நகர வேண்டும். ஆனால், மெல்ல மெல்ல நகர வேண்டும். முழுமையாக மாற சில ஆண்டுகள் எடுத்துகொள்ள வேண்டும்.
இந்த ஆண்டுகளில் இந்தியாவில் டிஜிட்டல் எஜுகேஷனைக் கொண்டு வர வேண்டும். மோசடிகளைக் கடுமையாக தடுப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கட்டமைக்க வேண்டும்.
பெரியவர்களும் பயன்படுத்தும் படி, டிஜிட்டல் ஆப்களை இலகுவாக்கும்.
இவை நடந்துவிட்டால், அப்புறம் இந்தியாவில் டிஜிட்டலுக்கு 'போலாம் ரைட்'!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)