திருமணம் மீறிய உறவு: கணவர் வெளியிட்ட வீடியோவால் பதைபதைப்பு; 'மூவரும் நலம்' - போலீஸ் நிம்மதி
இளம் பெண்ணான மனைவி வேறு ஒரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், வீட்டில் ஆண் நண்பருடன் அந்த இளம் பெண் இருக்க செல்போனில் வீடியோ எடுத்து கொண்டே வீட்டுக்குள் வரும் கணவர், அவனை வெளியே வரச்சொல்லு என ஆத்திரத்துடன் தகாத வார்த்தைகளில் பேசி கத்துகிறார்.
உடனே அவரது மனைவியும், 'ஏன் இப்ப கத்துற வரச்சொல்றேன் இரு' என்று தகாத வார்த்தைகளில் பேசுகிறார். இதையடுத்து வீட்டுக்குள் இருக்கும் ஆண் நண்பர் அவசர அவரசமாக வீட்டுக்குள் இருந்து வெளியே சென்று விடுகிறார்.

பின்னர், இளம் பெண்ணின் கணவர் தனது விரல்களில் ரத்தக்கறை படிந்த நிலையில் தன் நான்கு வயது மகனுடன் இருந்தபடி பேசுகிறார். அதில், ''என் குடும்பமே நாசமா போச்சு, எல்லாத்துக்கும் காரணம் திருச்சி சலூன் ஒன்றில் வேலை செய்த ஜோஸ் என்ற நபர்தான். என் பொண்டாடிக்கிட்ட ஒழுங்கா இருடினு எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.
இப்ப என் பொண்டாட்டி முகம், கழுத்து பகுதியில் கத்தியால் குத்திட்டு வந்துட்டேன். என் மகனைக் கொன்னுட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போறேன்'' என்றும், தன் மகனிடம், ''நான் இல்லாட்டி நீ இந்த உலகத்தில் வாழ்ந்துருவியா, நான் இல்லாமல் நீ என்ன செய்வ?" என்றெல்லாம் கேட்கிறார்.
பதிலுக்கு அந்தப் பிஞ்சு, ''எனக்கு பயமா இருக்குப்பா" என்று அழுகிறான். அந்தப் பெண்ணின் கணவர் அழுதுகொண்டே பேசி வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில் உள்ளவைதான் அவை மேலே சொல்லப்பட்டுள்ளவை.
அந்த வீடியோ நேற்றும், இன்றும் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வைரலானது. இதைப் பார்த்தவர்களின் நெஞ்சு பதைபதைத்தது. அந்தப் பெண்ணின் கணவருக்கும், அந்தப் பெண்ணுக்கும் ஆதரவாக மாறி மாறி பலரும் கருத்துக்களைப் பதிவிட்டனர்.
மேலும், எதுவும் அறியாத அந்தப் பிள்ளைக்கும் எந்த ஆபத்தும் வந்திடக்கூடாது என்கிற பதைபதைப்பு பலரையும் தொற்றிக்கொண்டது. இப்படியான சூழலில் திருமணம் மீறிய உறவு குறித்து வீடியோ வெளியிட்ட அந்த நபர் குறித்த தேடுதல் வேட்டையில் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் டீம் இறங்கியது.
பட்டுக்கோட்டை, மயில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ்(38). இவர் தான் தன் 25 வயது மனைவி குறித்து வீடியோ வெளியிட்டார். கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்துள்ளது. மனைவி திருமணம் மீறிய உறவில் இருந்ததால் இப்படியான செயலைச் செய்து விட்டு மகனைத் தூக்கிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
முகத்தில் காயம் பட்ட மனைவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சையில் இருக்கிறார். மகனுடன் சென்ற தர்மராஜைப் பாதுகாப்பாக மீட்பதற்காக முழு வீச்சில் களம் இறங்கியது போலீஸ். இதில் பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தர்மராஜ் மகனுடன் வல்லம் பகுதியில் இருப்பதை நேற்று இரவு கண்டுபிடித்து கைது செய்தனர்.
இருவரும் நலமாக இருப்பதைப் பார்த்த பின்னர்தான் போலீஸார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். பின்னர் போலீஸார் கைது செய்யப்பட்ட தர்மராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"என் மனைவிதான் சார் எனக்கு உலகம். அவகிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கவில்லை. திமிராவே நடந்து கொள்வாள். நமக்கு மகன் இருக்கான், நமக்குனு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு நாம நல்லபடியா வாழ்வோம், நீ தப்பான வழியில் போகாதுனு சொன்னேன். என்னோட உலகமே அவதான்.
அவளோட செயலைத் தாங்க முடியாமல் இப்படி செஞ்சிட்டேன் சார்" என்று போலீஸ்கிட்ட கதறியிருக்கிறார் தர்மராஜ். இப்போது தர்மராஜ் போலீஸ் கட்டுப்பாட்டிலும், அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சையிலும், மகன் உறவினர் வீட்டில் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர்.
மூவரும் நலமாக இருக்கிறார்கள். இது குறித்து தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)