தனியார் பல்கலை.,: "தவெக-விடம் பாஜகவின் போக்கு.!" - அமளிக்கு மத்தியில் சைலன்டாக நிறைவேற்றிய அரசு

Sep 18, 2026 - 18:00
0
தனியார் பல்கலை.,: "தவெக-விடம் பாஜகவின் போக்கு.!" - அமளிக்கு மத்தியில் சைலன்டாக நிறைவேற்றிய அரசு

கடந்த செப்டெம்பர் 8 அன்று தமிழக சட்டமன்றத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் 'பி. விஸ்வநாதன்', மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான ஒழுங்குமுறை விதிமுறைகளை தளர்வாக்கும் வகையில், '2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் விதி'களில் மாற்றங்களை முன்மொழிந்து ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார், அதனை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் ஆசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் என அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

அதாவது ஒரு தனியார் பல்கலைக்கழகம் அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவைப்பட்ட நிலையில் இனி அதில் மூன்றில் ஒரு பங்கு இருந்தாலே போதும் என பகுதிவாரியாக மாற்றப்பட்டுள்ளது, பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) பகுதிகளில் நிலத் தேவை 12 ஏக்கராகவும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி மன்றங்களில் 18 ஏக்கராகவும், மீதமுள்ள பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல நிரந்தர அறக்கட்டளை நிதி ரூபாய் 50 கோடி இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதிலிருந்து, ரூபாய் 25 கோடி இருந்தாலே போதும் என தளர்த்தப்பட்டுள்ளது.

பேராசிரியர் சிவகுமார்

"இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியயோர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களால் முனைவர் பட்டம் பெறுதல், ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல் போன்றவை குறைந்துவிடும்" என கல்வியாளர் காயத்ரியும், "தமிழ்நாட்டு மாணவர்களுக்கு உயர்கல்வியில் பாதுகாப்பாக படித்து முன்னேற வழி செய்யும் 69% இடஒதுக்கீடு இந்த சட்டம் மூலம் காலியாகிவிடும்" என கல்வியாளர் ரமேஷ் பிரபாவும் தெரிவித்தனர்.

இது குறித்து மக்கள் கல்வி கூட்டு இயக்கத்தை சேர்ந்த பேராசிரியர் சிவகுமாரிடம் கேட்டோம், "தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்ற மாநிலங்களை விட அதிகம். இந்நிலையில், இந்த தவெக அரசு இப்படி ஒரு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

இதனால் சிறிய சிறிய கல்லூரிகளுக்கு நிறைய சொத்துக்கள், நிலங்கள் இருக்கின்றன. அந்த நிலங்கள் ஒரு முதலீடாக பார்க்கப்படும். இதை நாம் அனுமதித்தால், மிகப்பெரிய கல்வி வியாபார சந்தைக்கான இடமாக தமிழ்நாடும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவிடும். அடித்தட்டு மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது என்பதோ, கட்டணமில்லா கல்வி என்பதோ நிச்சயமாக இருக்காது!

தமிழினப் பண்பாடு, கீழடி, தமிழ் நாகரிகம், தொல்லியல் ஆய்வு போன்றவற்றைப் பற்றியோ, ஒரு சமூக சிந்தனையோடு கூடிய கருத்துரிமை, பேச்சுரிமை சம்பந்தப்பட்ட விவாதக் கூடமாகவோ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருக்காது. எதிர்காலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை வரும்.

மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்

கல்வி கொடுப்பது அரசாங்கத்தினுடைய கடமை. தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை, ஆராய்ச்சிப் படிப்பு வரை பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலினம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜியோ ஏர்டெல்லுக்கு மத்தியில் பிஎஸ்என்எல் எப்படி சிக்கித் தவிக்கிறதோ அதேபோல எதிர்காலத்தில் அரசு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சிக்கித் தவிக்கும். எனவே இதனை போராட்டமாக முன்னெடுத்து திரும்ப பெற அரசை வலியுறுத்த வேண்டும்" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் இது குறித்து பேசும்போது அவர், "இதற்கு முன்னால் திமுக அரசு இந்த ஆண்டு ஆரம்பத்தில் இதைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் கூட்டணி கட்சிகள் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம், வாபஸ் பெறச் சொல்ல வேண்டும் என்று சொன்னோம். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். திமுக அதைச் செய்தார்கள். ஆனால் தவெக அரசு இதை இப்போது அவசர அவசரமாகச் செய்ய வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது? இதற்குள் இருக்கக்கூடிய கல்வி வியாபாரிகளுடைய பிரஷர் காரணமாக அந்த லாபியில் ஈடுபடுகிற அதிகாரிகள் கொடுத்ததை அப்படியே கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர்.

இந்த சட்ட திருத்தம் சாதாரண மக்களை பாதிக்கும். படித்துவிட்டு வேலை தேடி வருகிறவர்கள் அடிமாட்டு வேலைக்கு தள்ளப்படுவார்கள். ஆக்ஸ்போர்ட் மாதிரி பல்கலைக்கழகங்கள் வர வேண்டும் என அமைச்சர் தெரிவிக்கிறார், ஆனால் இதனை தனியாரிடம் ஒப்படைப்பதன் மூலம்.. ஆக்ஸ்போர்ட் மாதிரி பல்கலைக்கழகத்தை உங்களால் உருவாக்க முடியாது என்று சொல்வதாக தான் நான் பார்க்கிறேன்.

இந்தியாவில் அசோகா யுனிவர்சிட்டி மல்டி டிசிப்ளினரி. ஆனால் சாதாரண குடும்பத்து பிள்ளை யாராவது அங்கே போய் படிப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

தவெக உண்மையிலேயே தமிழ்நாட்டினுடைய நலன், கல்வி, மாணவர்களுடைய நலன், ஆசிரியர்கள் நலன் கருதிதான் செய்திருக்கின்றார்கள் என்றால் இதனை எதிர்கட்சியினர் வெளியேற்றப்பட்ட பிறகு நிறைவேற்றி இருக்க மாட்டார்கள். இதன் மூலம் தவெகவிடம் பாஜகவின் போக்கு தெரிகிறது. தனியார் பல்கலைக்கழகம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இந்த திருத்தத்தினை அரசு உடனே திரும்ப பெற வேண்டும்"என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User