ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: 'அனைத்து குண்டுகளின் தாய்' ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு!

Oct 16, 2026 - 09:30
0
ஈரான் மீது தாக்குதல் திட்டம்?: 'அனைத்து குண்டுகளின் தாய்' ஆயுதத்தை பயன்படுத்த அமெரிக்கா முடிவு!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ராணுவம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா - ஈரான் இடையே ஹர்மூஸ் நீரிணை தொடர்பாக தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளின் நடுவண் முயற்சியால் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும், ஒப்பந்த மீறல்கள் காரணமாக அவ்வப்போது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்குவதற்கான ஆலோசனையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்கா, ஈரான்
அமெரிக்கா, ஈரான்

இந்தத் தாக்குதலின்போது, அமெரிக்கப் படையிடம் உள்ள மிகப்பெரிய அணுஆயுதமற்ற குண்டுகளில் ஒன்றைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் அடங்கியுள்ளதாக 'சி.என்.என்' (CNN) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்தச் செய்தியில், அனைத்து வெடிகுண்டுகளின் தாய் என அழைக்கப்படும் GBU-43/B Massive Ordnance Air Blast என்ற சக்திவாய்ந்த குண்டை ஈரான் மீது வீசுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த வான்வழி வெடிகுண்டு, பரந்த பரப்பளவிலான இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது.

ஈரான் எல்லைக்குள் இதுவரை பயன்படுத்தப்படாத இந்த ஆயுதம், கடந்த 2017-ம் ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தின் போது ஆப்கானிஸ்தானில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்தச் செய்தி குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாட்டின் அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலரின் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தவும், எந்தவொரு போர்க்களச் சூழலிலும் வெற்றியடையவும் தேவையான பல்வேறு செயல்பாட்டுத் திட்டங்களை அமெரிக்க ராணுவம் எப்போதும் தயாராக வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த உத்தரவிட மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார். இருப்பினும், ஹர்மூஸ் நீரிணைப் பகுதியில் சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது மற்றும் சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் நடத்திய தொடர் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக மத்திய கிழக்கு விவகாரத்தில் கணிசமான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு வெள்ளை மாளிகை தள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் காரணமாக ஈரான் தனது முக்கிய ஆற்றல் மையங்கள் மற்றும் அணுசக்தி மையங்களைச் சுற்றியுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக 'தி வால் ஸ்டிரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்கா

ராணுவ வலிமை, தற்காப்பு உத்திகள், பேச்சுவார்த்தை மற்றும் பிராந்திய செல்வாக்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தி, அமெரிக்காவைத் தங்களின் கோரிக்கைகளுக்குப் பணிய வைப்போம் என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தங்களின் இலக்கு முடிவில்லாத போரில் ஈடுபடுவது அல்ல என்றும், எதிரிகள் ராணுவத் தாக்குதல்கள் மூலம் தங்களின் இலக்குகளை அடைவதைத் தடுப்பதே முதன்மை நோக்கம் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User