பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

Jul 13, 2026 - 18:02
0
பட்டுக்கோட்டை: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் - பணம் தராததால் வெறிச்செயல்!

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(65) கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களுக்கு மேனகா(38), மௌனிகா(25) என இரண்டு மகள்கள். மேனகா திருமணமானவர். கருத்துவேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்வதாக சொல்கிறார்கள். செல்வராஜ், தொழில் செய்ய வேண்டும் என மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட செல்வராஜ்

இதையடுத்து அவரது உறவினர்கள், விஜயலட்சுமி மற்றும் மகள்களிடம் கூடி பேசி இரண்டு சவரன் நகையை விஜயலட்சுமியிடம் இருந்து வாங்கி கொடுத்துள்ளனர். நகையை அடகு வைத்து பணத்தை செலவு செய்திருக்கிறார். சில மாதங்கள் அமைதியாக இருந்த செல்வராஜ், மீண்டும் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து பணம் கேட்டுள்ளார்.

இதற்கு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. செல்வராஜ் பணம் கேட்டு பிரச்னை செய்யும் போதெல்லாம் இரண்டு மகள்களும் தாய் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்துள்ளனர். நேற்று இரவும் இதே போல் பணம் கேட்டு செல்வராஜ் பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். பணம் தராத ஆத்திரத்தில் இருந்த செல்வராஜ் அதிகாலையில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ மள மளவென பரவி எரிய மூன்று பேரும் அலறி துடித்துள்ளனர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த மூவரையும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தாய் மற்றும் இரண்டு மகள்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User