`அப்பாவை ரஜினி சார் கூட்டி வரச் சொன்னார், அதுக்குள்ள...' - மனம் கலங்கும் `லொள்ளு சபா' ஜீவா

Jul 13, 2026 - 18:02
0
`அப்பாவை ரஜினி சார் கூட்டி வரச் சொன்னார், அதுக்குள்ள...' - மனம் கலங்கும் `லொள்ளு சபா' ஜீவா

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர். சின்னத்திரையைத் தாண்டி சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது தந்தை தங்கவேல் கடந்த வாரம் காலமானார்.

அவரது மரணச் செய்தி கேள்விப்பட்டதும் உடனே ஜீவாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசி ஆறுதல் கூறியிருக்கிறார் ரஜினி.

இது குறித்து ஜீவாவிடம் பேசினோம்.

லொள்ளு சபா ஜீவா

''நல்ல ஆரோக்கியத்துடனேயே இருந்தார். முதுமைக்கால பிரச்னைகள்லாம் கூட பெரிசா இல்ல. ஆனா இவ்வளவு காலம்தான் அவருக்கு இந்த பூமியிலிருக்க கொடுப்பினை இருந்திருக்கு.

நல்ல உழைப்பாளி. குடும்பத்தின் மீது அவ்வளவு பாசமா இருந்தவர். அடிப்படையில் கமல் சார் ரசிகர். ஆனா நான் ரஜினி சார் ரசிகர் மன்றப் பணிகள்ல ஈடுபட ஆரம்பிச்சப்ப எந்த தடையும் சொல்லல. தாயும் பிள்ளையுமா இருந்தாலும் அவரவர்க்கு விருப்பு வெறுப்புகள் இருக்கும்னு நம்பினவர்.

சுதந்திரம் கொடுத்து வளர்த்தார். அதேநேரம் பிள்ளைகளை நல்ல பண்புடையவர்களாகவும் வளர்த்தார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்துகிட்டே அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டினார். காங்கிரஸ்காரர். அவருடன் பேசிப் பேசியே எனக்குள்ளும் அரசியல், பொதுப் பணிங்கிற தாக்கம் வந்திச்சுனு சொல்வேன்.

கமல் சார் ரசிகரா இருந்தாலும், அவர் கட்சி ஆரம்பிச்சதும் அந்தக் கட்சிப் பக்கம் போகலை.

ஒருவேளை கமல் சாரை அவரது நடிப்புக்கு மட்டும்தான் பிடிச்சதோ என்னவோ?

ஆனா ரஜினி சார் அரசியலுக்கு வர்றேன்னு சொன்னதும் ரொம்ப ஆரவமா அதை எதிர்பார்த்தார். அவர் வந்தா நிச்சயம் முதலமைச்சர்தான்னு உறுதியாக சொன்னார்.

ரஜினி சார் அரசியலுக்கு வருவாரா இல்லையாங்கிறதைப் பத்திக் கடைசி வரை கேட்டுகிட்டே இருந்தார்.

கடைசியா ரஜினி சார் தெளிவான ஒரு பதிலைச் சொன்ன பிறகும் கூட இவருடைய எதிர்பார்ப்பு நின்னபாடில்லை. இப்ப வந்தாக் கூட அவரால ஜொலிக்க முடியும்னு நடந்து முடிந்த தேர்தலப்பக் கூட சொல்லிட்டிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

அப்பா இப்படிச் சொல்றது பத்தி தலைவர்கிட்யும் நான் சொல்லியிருக்கேன். அவர் வழக்கமான தன் சிரிப்பையே பதிலா தந்தார். அதேபோல 'ஒரு தடவை அப்பாவை வீட்டுக்குக் கூட்டிட்டு வா ஜீவா'னு சொன்னார் தலைவர். அப்பாகிட்டயும் அதைச் சொன்னேன்.

ஆனா ஏனோ அப்பாவுடன் நான் தலைவரைப் போய்ச் சந்திக்கிற அந்த சூழல் அமையவே இல்லை. அதை நினைச்சா இப்ப கொஞ்சம் வருத்தமா இருக்கு.

தலைவர் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்த அப்பாவை தலைவர் கிட்ட உட்கார வச்சு பேசியிருந்தா அப்பா மனசு ரொம்பவே சந்தோசப் பட்டிருக்கும். அது நடக்காமப் போயிடுச்சு.

அப்பா இறந்த அன்னைக்கும் தலைவருக்கு நான் தகவல் சொல்லலை. மருத்துவமனையில இருந்து அப்பா உடலை வீட்டுக்கு கொண்டு போயிட்டிருந்த அந்த சூழல்ல யார்கிட்டயும் என்னால் பேச முடியலை.

ஆனா வீட்டுக்கு அப்பா உடல் வந்து கொஞ்ச நேரத்துல தலைவர் வீட்டுல இருந்து போன்.

மருத்துவமனையில என் கூட இருந்த சிலர் மூலமா அவருக்குத் தகவல் போயிருக்கு. உடனே லைன்ல வந்துட்டார்.

லொள்ளு சபா ஜீவா

எனக்கு ஒரு நிமிஷம் பேசவே வரலை. போன்லயே உடைஞ்சு அழுதுட்டேன். ஆறுதலா பேசிட்டு வச்சார். அத பிறகு ராகவேந்திரா மண்டபத்துல இருந்தும் அங்கங்க தலைவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள்கிட்ட இருந்தும் போன் கால்கள் வந்தன.

எப்பப்பா வர்றார் உங்க தலைவர்னு எங்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தார் அப்பா. ஆனா ஒரு தடவையாச்சு அவரை ரஜினி சார் கூட ரெண்டு வார்த்தை பேச வச்சிருக்கலாம் நான். அதைக் கூட பண்ணாம இருந்துட்டேன்' எனக் கண் கலங்கியபடி முடித்தார் ஜீவா.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User