OpenAI அலுவலகத்தில் ரகசிய ஒலிப்பதிவுக் கருவி... கைது வரை சென்ற விசாரணை! - என்ன நடந்தது?

Oct 15, 2026 - 15:01
0
OpenAI அலுவலகத்தில் ரகசிய ஒலிப்பதிவுக் கருவி... கைது வரை சென்ற விசாரணை! - என்ன நடந்தது?

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான OpenAI அலுவலகத்தில், ரகசியமாக ஒலிப்பதிவு செய்யும் கருவி வைக்கப்பட்டதாக எழுந்த புகார், ஊழியர் ஒருவரின் கைது வரை சென்றுள்ளது.

தொலைக்காட்சியின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்ட கருவி

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள OpenAI அலுவலகத்தின் நிர்வாகக் கூட்ட அறையில், தொலைக்காட்சியின் பின்புற USB போர்ட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பதிவுக் கருவியைச் செப்டம்பர் 30ஆம் தேதி ஊழியர்கள் கண்டறிந்தனர். அந்தக் கருவி டிஷ்யூ (Tissue) பேப்பருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் பதிவான தகவல்கள் குறியாக்கம் (Encryption ) செய்யப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில், OpenAI நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய அப்துல்ரஹ்மான் அல்ஃபோஸான் (35) மீது குற்றச்சாட்டு எழுந்தது. அலுவலகக் கண்காணிப்புக் காட்சிகள், கூட்ட அறைக்கு அருகில் அவர் வந்தது தொடர்பான பதிவுகள், அவரது பையில் கண்டெடுக்கப்பட்ட இதேபோன்ற மற்றொரு கருவி உள்ளிட்ட ஆதாரங்கள் விசாரணையில் முன்வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்டோபர் 9ஆம் தேதி FBI அவரைக் கைது செய்தது. அவர் மீது ரகசியமாகப் பேச்சைப் பதிவு செய்யும் கருவியைப் பயன்படுத்த முயன்றதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

AI சாட்பாட்டும் விசாரணையில்

இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம், AI சாட்பாட் தொடர்பான பதிவுகள். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரின்படி, குறிப்பிட்ட ஒலிப்பதிவுக் கருவியின் தனிப்பயன் ஹெடர் மற்றும் MAC முகவரி தொடர்பான கேள்விகள், அதே சாட்பாட் கணக்கில் பதிவாகியிருந்தன. இத்தகவல்களையும் அலுவலகக் கண்காணிப்புக் காட்சிகளையும் இணைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், OpenAI நிறுவனத்தின் மாடல் எடைகள், மூலக் குறியீடு அல்லது வாடிக்கையாளர் தரவுகளை அவர் அணுகியதற்கோ, வெளியே எடுத்துச் சென்றதற்கோ இதுவரை ஆதாரம் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை

அக்டோபர் 13ஆம் தேதி அல்ஃபோஸான் அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முறையாக ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் காவலில் உள்ள நிலையில், அக்டோபர் 19ஆம் தேதி அவரைத் தொடர்ந்து காவலில் வைப்பது தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது என்று அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், OpenAI அலுவலகத்தில் கண்டறியப்பட்ட கருவி தொடர்பான முழுமையான விவரங்களும் அதன் பின்னணியும் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகளில் தெளிவாகலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User