'சபரிமலை போன்று ​குருவாயூர் கோயில் தரிசனத்திற்கும் ஆன்லைன் முன்பதிவு' - தேவஸ்வம் அமைச்சர் தகவல்

Jun 18, 2026 - 10:32
0
'சபரிமலை போன்று ​குருவாயூர் கோயில் தரிசனத்திற்கும் ஆன்லைன் முன்பதிவு' -
தேவஸ்வம் அமைச்சர் தகவல்

பிரசித்திபெற்ற​ குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் நீண்ட மணிநேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க, சபரிமலை போன்று விர்ச்சுவல் கியூ வரிசை முறை அமல்படுத்தப்படும் என்று கேரள தேவஸ்வம்போர்டு அமைச்சர் கே.முரளீதரன் தெரிவித்துள்ளார்.​

குருவாயூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகளுடனும், அதிகாரிகளுடனும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் கே.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரும் வகையில் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்.

இதற்காக பிரத்யேகமான 'மாஸ்டர் பிளான்' நடைமுறைப்படுத்தப்படும். கோயிலின் விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணி அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும்.

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயில், சபரிமலை ஐயப்பசுவாமி கோயில் மற்றும் கொட்டியூர் மகாதேவர் கோயில் ஆகிய முக்கியத் திருக்கோயில்களை அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறந்த ஆன்மீகத் தலங்களாக மாற்ற அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அமைச்சர் கே.முரளீதரன்
அமைச்சர் கே.முரளீதரன்

தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான ஒரு சிறு துண்டு நிலம் கூட தவறான முறையில் பயன்படுத்தப்படாமல், ஆக்கிரமிக்கப்படாமல் முழுமையாகப் பாதுகாக்கப்படும். ​வேங்காடு கோசாலையில் உள்ள பசுக்களை நிபுணர்களின் மேற்பார்வையில் முறையாகப் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். ​

புகழ்பெற்ற குருவாயூர் யானைக் கோட்டையில் உள்ள கோவிலகம் ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். இங்கு சுமார் 75 யானைகள் சுதந்திரமாகவும் வசதியாகவும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படும். ​

யானைகளைத் தானமாக ஏற்றுக்கொள்வது தொடர்பான சாதகமான முடிவுகள் அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்படும். குருவாயூரில் தற்போது இயங்கி வரும் மருத்துவமனை நவீன மயமாக்கப்படும்" என்றார்.

குருவாயூரில் தேவஸ்வம் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.முரளீதரன் ஆய்வு
குருவாயூரில் தேவஸ்வம் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.முரளீதரன் ஆய்வு

மேலும், குருவாயூர் கோயிலின் கிழக்கு நடையில், 1909-ம் ஆண்டு மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சேத்தூர் சங்கரன் நாயரால் காணிக்கையாக வழங்கப்பட்ட பழமையான தீபஸ்தம்பம் புதுப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட தீபஸ்தம்பத்தின் திறப்பு விழாவிலும் தேவஸ்வம் போர்டு அமைச்சர் கே.முரளீதரன் கலந்துகொண்டார். சபரிமலை கோயிலில் கொரோனா பரவல் சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டது. அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால் கூட்டம் கட்டுப்படுத்தப்படுவதுடன், எத்தனை பக்தர்கள் வருகிறார்கள் என்பதுபோன்ற விபரங்களும் சேகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதுபோன்று, குருவாயூர் கோயிலிலும் அமல்படுத்தப்படுவது பக்தர்களுக்குப் பெரிய அளவில் நேரத்தை மிச்சப்படுத்தும். இது நெரிசலைக் கட்டுப்படுத்தவும், தரிசன நேரத்தைத் துல்லியமாகத் திட்டமிடவும் உதவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User