`அவ்ளோதான்...' முடக்கிய காயம்: பல ஆண்டு போராட்டம் டு Asian Games-ல் வெண்கலம்; பரணிகாவின் சாதனை பயணம்

Sep 27, 2026 - 10:00
0
`அவ்ளோதான்...' முடக்கிய காயம்: பல ஆண்டு போராட்டம் டு Asian Games-ல் வெண்கலம்; பரணிகாவின் சாதனை பயணம்

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசியப் போட்டிகளில் போல் வால்ட் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார், மயிலாடுதுறை மாவட்டம், சேத்திரபாலபுரத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த இவர், பல்வேறு தடைகளைத் தாண்டி ஆசிய அளவில் பதக்கம் வென்றிருப்பது அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பரணிகா இன்னும் பெரிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்” என்பதே அவரது பெற்றோரின் நம்பிக்கையாக உள்ளது.

பரணிகா இளங்கோவன்

பரணிகாவின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்ததுடன், ₹30 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவித்துள்ளார். இதற்காக பரணிகாவின் தந்தை இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பரணிகா இளங்கோவன் பெற்றோர்

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார், பரணிகாவின் தந்தை இளங்கோவன்.

சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த பரணிகா, 7-ம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் வேண்டும் எனக் கேட்டுள்ளார். வீட்டில் எதற்காக சைக்கிள் எனக் கேட்டபோது, “பள்ளி வாகனம் மாலையில் சீக்கிரமாகக் கிளம்பிவிடுவதால், மைதானத்தில் அதிக நேரம் பயிற்சி செய்ய முடியவில்லை. சைக்கிள் இருந்தால் இன்னும் அதிக நேரம் பயிற்சி செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார். மகளின் விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்துகொண்ட பெற்றோர், அவருக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

சிறு வயதிலிருந்தே விளையாட்டில் இருந்த ஆர்வம் தொடர்ந்த அதே நேரத்தில், படிப்பிலும் பரணிகா கவனம் செலுத்தியுள்ளார். 12-ம் வகுப்பில் 1,163 மதிப்பெண்கள் பெற்ற அவர், சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதுதான் போல் வால்ட் விளையாட்டில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

பரணிகா இளங்கோவன்

ஆனால், அவரது விளையாட்டுப் பயணத்தில் ஒரு கட்டத்தில் பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போல் வால்ட் பயிற்சியின்போது போல் கம்பி உடைந்து, காலில் காயம் ஏற்பட்டுள்ளது. “இனி என் வாழ்க்கை அவ்வளவுதான்” என்று அவர் அழுததாக பெற்றோர் கூறுகின்றனர். ஆனால், மருத்துவர்கள் அளித்த நம்பிக்கையும், குடும்பத்தின் ஆதரவும் அவரை மீண்டும் பயிற்சிக்குத் திரும்ப வைத்துள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகள் போராடி மீண்டும் களத்துக்குத் திரும்பியுள்ளார்.

பரணிகா இளங்கோவன்

காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பயிற்சியில் கவனம் செலுத்திய பரணிகா, தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில், ஒடிசாவில் அனில் அம்பானியால் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகளுடன் பரணிகா பயிற்சி பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

போல் வால்ட்டுக்கான போல் கம்பிகள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்படுவதாகவும், ஒரு கம்பியின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் அவரது பெற்றோர் கூறுகின்றனர். இதுவரை பயிற்சிக்குத் தேவையான கம்பிகளை குடும்பத்தினரே சொந்த செலவில் வாங்கி வந்துள்ளனர். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் பரணிகாவுக்கு, பயிற்சிக்குத் தேவையான போல் கம்பிகளை அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைப்புகள் வழங்கினால் உதவியாக இருக்கும் என்பதே அவரது குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User