2.5 லட்சம் பனை விதைகள் நடும் பணி... வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முக்கிய பங்காற்றும் இளைஞர்

Sep 27, 2026 - 19:30
0
2.5 லட்சம் பனை விதைகள் நடும் பணி... வேலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து முக்கிய பங்காற்றும் இளைஞர்

வேலூர் மாவட்டத்தில் `ஒரு ஊராட்சிக்கு 1,000 பனை விதைகளை நடுவது’ என்ற இலக்குடன் மொத்தமுள்ள 247 ஊராட்சிகளிலும் 2.5 லட்சம் பனைகளை விதைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளின் கரையோரம், மேய்க்கால் நிலங்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, குப்பம் ஊராட்சிக்குஉட்பட்ட பழவேரி கிராமத்தில் பனை விதைகளை நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ்.

பனை விதைகள் நடும் பணி

அப்போது, `அக்டோபர் 2-ம் தேதிக்குள் ஊராட்சிகளில் 1,000 பனை விதைகளை நடும் இலக்கை முடித்துவிட வேண்டும்’ எனவும் அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பசுமை ஆர்வலரான இளைஞர் தினேஷ் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பனை விதைகளை சேகரித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடும் பணியில் முக்கிய பங்காற்றி வருகிறார் தினேஷ் சரவணன்.

இதுபற்றி, தினேஷ் சரவணன் கூறுகையில், ``வேலூர் மாவட்டத்தில் ஏரிக்கரை ஓரங்களில் பல வருடங்களாக பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில், இந்த வருடத்துக்குத் தேவையான பனை விதைகளை சேகரித்து வைத்துள்ளேன். இதுவரை பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விதைகளை சேகரித்து வைத்துள்ளேன். அதனை ஊராட்சிகள்தோறும் விதைக்க ஆரம்பித்துள்ளோம். அடுத்தடுத்த நாள்களில் இலக்கை எட்டிவிடுவோம்’’ என்றார்.

பனை விதைகள் நடும் பணி

அதேபோல, வேலூர் மாநகராட்சிக்குஉட்பட்ட விருதம்பட்டு சர்க்கார் தோப்புப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுமார் 1,000 மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் பசுமையாக்கல் திட்டப் பணியிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் தினேஷ் சரவணன். இதையொட்டி, முதற்கட்டமாக சர்க்கார் தோப்பில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. ``மரக்கன்றுகளைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்படும். தினமும் அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடு செய்யப்படும். மீதமுள்ள 900 மரக்கன்றுகளும் விரைவாக நடப்படும்’’ என்கிறார் தினேஷ் சரவணன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User