நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

Mar 10, 2026 - 12:32
 0
நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று மாலையில் டியூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள், அந்த மாணவியை வழிமறித்து அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மாணவி அருகில் வந்து விசாரித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மாணவி விவரத்தைக் கூற, அந்த 2 இளைஞர்களையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். உடனே இருவரும் பைக்கில் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த மாணவியின் தந்தையும், அந்த மாணவியும் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அவர்களிடம் சிக்காமல் இருக்க 2 இளைஞர்களும் பைக்கில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். களக்காட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மாவடி பகுதியில் சென்றபோது 2 இளைஞர்களின் பைக்கை முந்திச் சென்று தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து இருவரும் பைக்கைக் கீழே போட்டுவிட்டு சாலையோரமுள்ள தனியார் தோட்டத்திற்குள் சென்றனர். தந்தையும், மாணவியும் அவர்களைப் பின்தொடர்ந்து ஓட, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் ஓடிச் சென்றனர்.  

2  பேரில் ஒருவரைப் பிடித்தனர். அவரை திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் திருக்குறுங்குடி அருகிலுள்ள வட்டக்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பதும், தப்பியோடியது அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பதும் தெரிய வந்தது.

திருக்குறுங்குடி காவல் நிலையம்
திருக்குறுங்குடி காவல் நிலையம்

அதனைத் தொடர்ந்து போலீஸார் தலைமறைவான சரவணனையும் கைது செய்தனர். தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவிட்டு தப்பிச் சென்றவர்களைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த அந்த மாணவியை போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். சினிமாவில் வருவதுபோல் நடந்த இச்சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0