நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

Jun 04, 2026 - 16:32
0
நெல்லை: மது போதையில் தந்தையை இரும்புக் கம்பியால் அடித்து கொன்ற மகன்! - சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் பகுதியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (வயது 43). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

அவரின் மனைவி கல்யாணி. இந்தத் தம்பதிக்கு மகாராஜன் என்ற மனோ (19) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனர். மகாராஜன் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், அதன் பின்னர் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர் வேலை எதுவும் செய்யாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார்.

மகாராஜன் சிறு வயதிலேயே மது போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார். அதை மாயாண்டி கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மதுபோதையில் இருந்த மகாராஜன், ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் தன்னுடைய தந்தை என்றும் பாராமல் மாயாண்டியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

மகாராஜன் தாக்கியதில் மாயாண்டியின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மகாராஜன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும், நெல்லை சந்திப்பு போலீஸார் சம்பவ இடத்துக்குகு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த நெல்லை சந்திப்பு போலீஸார், தப்பிச் செல்ல முயன்ற மகாராஜனை கைதுசெய்தனர்.

மாயாண்டி

இதனிடையே, மாயாண்டியை அவர் மனைவி கல்யாணி மற்றும் அவர் சகோதரர் மற்றும் தந்தை ஆகியோர் கூட்டுச் சேர்ந்து தாக்கி கொலை செய்துவிட்டதாக உயிரிழந்த மாயாண்டியின் சகோதரர் வைகுண்டம் குற்றம்சாட்டியுள்ளார். உண்மையைச் சொன்னால் தங்களை காவல்துறையினர் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். அதனால் நியாயமான முறையில் விசாரணை நடத்த வலியுறுத்தி மாயாண்டியின் தந்தை, சகோதரர், சகோதரி ஆகியோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கண்ணீர்மல்க மனு அளித்தனர்.

பெற்ற தந்தையை மகனே கொலை செய்திருப்பதும், இந்தக் கொலை தொடர்பாக உறவினர்களே பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User