கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் - அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!

Jun 16, 2026 - 12:30
0
கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் - அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் விளைவாக நகர்புற துணை சுகாதார நிலையம் அண்மையில் புதிதாக கட்டப்பட்டது. கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட இந்த நகர்புற துணை சுகாதார நிலையத்தில் பணிகள் முழுவதும் முடிந்தும், முழுமையாக திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதனால் தற்காலிகமாக மேல்கொண்டாழி வடக்குத் தெருவில் உள்ள விநாயகர் கோயிலில் வார இறுதி நாள்களில்... மருத்துவ ஊழியர்கள் மட்டும் வந்து மருத்துவம் பார்த்துவிட்டுச் செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பதால், முறையான சிகிச்சை பெறமுடியாமல் அவதியடைவதாகப் புலம்புகின்றனர். மேலும், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள பகுதிக்கு பின்பே குப்பைக் கிடங்கில் மலைபோல் முறையான திட்டமிடல் இல்லாமல் குப்பைகள் கொட்டப்படுவதால், மருத்துவமனையில் சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

விரைந்து நகராட்சி நிர்வாகம் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என்றும், பின் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி மாற்றுவழி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து பேசிய கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆறு.கிரி, ``கூத்தாநல்லூர்ல சுமார் 50,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்குனு நகர்புற துணை மருத்துவமனை ஒன்னு கட்டுனாங்க. ஆனா, அதை செயல்பாட்டுக்கு கொண்டுவராம.. பக்கத்துல இருக்க குப்பை கிடங்கத்தான் செயல்பாட்டுல வச்சிருக்காங்க. மருத்துவமனைக் கட்டடத்தின் பின்புறம் தேங்கி கிடக்கும் குப்பைகள், கழிவுநீர்னு எப்போதும் துர்நாற்றம் வீசக்கூடிய இடமா சுகாதாரமற்று இருக்கு.

இதனால மேல்கொண்டாழி வடக்குத் தெருவில் விநாயகர் கோயிலில் வாரம் வாரம் வந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுறது மாதிரியான மருத்துவத்தை கோயில்ல வெச்சே பார்க்கிறாங்க. பல முறை புகார் கொடுத்துட்டோம். `இது ஆல்ரெடி ஓபன் பண்ணிட்டோம்'னு சொல்றாங்க.

ஆனா, முழுசா செயல்பாட்டுக்கு வரலையேன்னு கேட்டா... `அங்க ஒரே குப்பையா இருக்கு. ஒரே வாடையா இருக்கு. அதனால திறக்க முடியல'ன்னு சொல்றாங்க. அப்போ குப்பை கொட்டும் இடத்தை மாத்திட்டு மருத்துவமனையை திறங்கன்னு சொன்னா... அதுக்கு பதிலே இல்லை.

வசதி உள்ளவங்க இங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையைப் பயன்படுத்துறாங்க. ஆனா, அதிகம் வசிக்கக்கூடிய பாமர மக்கள் என்ன செய்வாங்க? இவ்வளவு பெரிய மருத்துவமனைய கட்டிட்டு, குப்பையைக் காரணம் காட்டி கோயில்ல மருத்துவம் பார்த்தா என்ன செய்வது? விரைந்து குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி, தமிழக அரசு துணை சுகாதார நிலையத்தை முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

நகர்புற துணை சுகாதார நிலையம் முழுவதும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பது குறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சிவரஞ்சனியிடம் விளக்கம் கேட்டபோது, நகர்புற துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதாக நம்மிடம் கூறினார். அவர் கூறியதை மறுத்து நம் கள ஆய்வில் கட்டடம் முழுவதும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறியதை குறுக்கிட்டு கேட்டபோது, நம் அழைப்பை துண்டித்து விட்டார். பின் அழைப்பை ஏற்கவேயில்லை.

அலட்சியம், அலைக்கழிப்பு தான் அரசு துறையின் அடையாளம் என்ற அவலநிலை என்று மாறப் போகிறதோ?!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User