மயிலாடுதுறை மாவட்டம், திருக்கோலக்கா திருத்தாளமுடையார்: பிள்ளைகளுக்கு சீக்கிரம் பேச்சுவர அருளும் தலம்

May 05, 2026 - 09:02
0
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கோலக்கா திருத்தாளமுடையார்: பிள்ளைகளுக்கு சீக்கிரம் பேச்சுவர அருளும் தலம்

தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274. அவற்றில் ஞான சம்பந்தர் பாடிய தலங்கள் அனைத்தும் மிகவும் சிறப்புப் பெற்றவை. மூன்று வயதுக் குழந்தையாக சிதம்பரம் தீர்த்தக் குளத்தில் அழுதுகொண்டிருந்த ஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் கொடுக்க அந்தக் கணம் முதல் ஈசனைப் பாடத் தொடங்கினார்.

அவர் பாடி பாடல்கள் கேட்டு ஊரோர் அனைவரும் மயங்கியதை விட அந்த ஈசனும் அம்மையும் மகிழ்ந்தனர். அப்படி அவர் பாடி அருளிய தலங்களில் ஒன்று திருக்கோலக்கா.

சீர்காழியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். சீர்காழி எல்லை முடிவதற்குள் வந்துவிடும் தலம் இது. காவிரிக்கரைத் திருத்தலங்களுள் ஒன்றான திருக்கோலக்காவுக்கு வந்த திருஞானசம்பந்தர், வேதத்தின் சாரமாம் விடையேறு நாதனைத் தரிசித்தார்.

கண்டதும் கசிந்து பாடினார். `மடையில் வாளை பாய மாதரார்’ என்று பதிகம் பிறக்க பெரும் சப்தம் எழுப்பித் தளமிட்டுப் பாடினார்.

திருக்கோலக்கா திருத்தாளமுடையார்
திருக்கோலக்கா திருத்தாளமுடையார்

பக்திப் பெருக்கில் கண்ணீர் வழிந்தோட சம்பந்தர் பாடியபோது கூடியிருந்த கூட்டம் மயங்கியது. பாடலின் வேகம் கூடக் கூட பிஞ்சுக் கரங்கள் தாளம் போடப் போட கரம் சிவந்தது. இதைக் கண்ட ஈசன் மனம் கசிந்தார்.

அப்போது பிள்ளையின் கரங்களில் ஐந்தெழுத்து எழுதப்பெற்ற ஆடகப் பொன் தாளம் வந்து அமர்ந்தது. தாளம் என்பது இன்றைக்கு ஜால்ரா என்று சொல்கிறோம் அல்லவா அதுவே.

கையில் வைத்துத் தாளம் எழுப்ப இறைவன் கொடுத்த பரிசு. நாம் எல்லோரும் பித்தளை அல்லது வெண்கலத்தில் தாளம் வைத்திருப்போம். ஆனால் ஈசன் அப்படிக் குறைவான மதிப்புடைய தாளத்தைக் கொடுப்பாரா...

எப்போதும் உயர்வானவற்றையே கொடுத்துப் பழகிய ஈசன் பொற்றாளத்தைக் கொடுத்தார்.

ஞானசம்பந்தரோ சிரசின்மீது தாளத்தை வைத்து வணங்கிய பின் அதைக் கைகளில் எடுத்துத் தட்டினார். ஆனால் பொன்னால் ஆன தாளத்தில் சத்தம் எழவில்லை. இதைக் கண்ட உமை அம்மை தன் அருளால் அந்தத் தாளத்துக்கு ஓசை கொடுத்தாள்.

இந்த அற்புதம் நடைபெற்ற தலத்தில் அருளும் ஈசனுக்கு சப்த புரீஸ்வரர் என்றும் திருத்தாளமுடையார் என்றும் திருப்பெயர். திருஞான சம்பந்தருக்குத் தாளம் கொடுத்ததால் இப்படியொரு திருநாமம்.

கருவறையில் சதுரபீட ஆவுடையாராக ஒளிமிக்க சற்று குட்டையான சிவலிங்கத் திருமேனியராகத் திகழ்கிறார் திருத்தாளமுடையார். மேலே ருத்ராட்ச விதானம் அமைந்துள்ளது.

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி
திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி

அம்பிகை இங்கே, 'ஓசை கொடுத்த நாயகி' என்று வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கிய தனி ஆலயத்தில் நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக, வரத- அபய ஹஸ்தம் தாங்கி எழிலாகக் காட்சி தருகிறாள் அன்னை.

தொனிப்ரதாம்பாள் என்று வடமொழியிலும் ஓசை கொடுத்த நாயகி என்று தமிழிலும் இவள் போற்றப்படுகிறாள். ஆதியில் மாசிலா ஈஸ்வரர் என்று ஈசனும், பெரியநாயகி என்று அம்பிகையும் திருநாமம் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு வந்து வழிபட்டால் பேச முடியாதவர்களுக்குப் பேச்சு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

`ஓர்காழிப் பாலற்கா அன்று பசும் பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா!' என்று வள்ளலார் வியந்த தலமிது.

2,000 ஆண்டுகள் பழைமையான திருக்கோலக்கா, சம்பந்தரால் பாடப்பெற்றது. சோழர் காலத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, பின்னர் நகரத்தார் விரிவாகக் கட்டினர் என்கிறது தலவரலாறு.

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள, தேவாரப் பாடல்பெற்ற 15ஆவது தலம் இது. 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்ட இந்தச் சிறிய கோயிலில் விநாயகர், சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், சனீஸ்வரர், பைரவர், துர்கை, முருகன், மகாலட்சுமி மற்றும் நவகிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. கையில் தாளத்துடன் காட்சி தரும் திருஞான சம்பந்தரின் திருவுருவமும் இங்குள்ளது.

சீர்காழியில் சித்திரைத் திருவிழாவின் இரண்டாம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். பிறகு திருக்கோலக்காவில் பொற்றாளம் கொடுக்கிற திருவிழாவும் நடைபெறும்.

திருஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றாளம் கொடுத்த திருவருளைப் பற்றி சுந்தரர் தனது பதிகத்தில் பாடியுள்ளார். சூரியன், அகத்தியர், கண்வர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அப்பர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் வணங்கிய திருத்தலமிது.

திருக்கோலக்கா திருஞானசம்பந்தன்
திருக்கோலக்கா திருஞானசம்பந்தன்

சரியாகப் பேச்சு வராதவர்கள், இனிய குரல் வேண்டும் பாடகர்கள் இங்கு வந்து ஈசனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், பேசும் திறனும், நல்ல குரல் வளமும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இங்குள்ள அம்பிகைக்குத் தேன் அபிஷேகம் செய்து அந்தத் தேனை நாவில் எழுதிக்கொண்டால் பேச்சு வரும் என்பதும் நம்பிக்கை. சங்கீத வித்வான்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு சிறந்த குரல் வளத்தைப் பெற்றியிருக் கிறார்களாம். செவித் திறன் குறைந்தவர்களும் இங்கு வந்து வழிபட நல்ல பலன் கிடைக்குமாம்.

சிதம்பரம் செல்லும் அன்பர்கள் தவறாமல் திருக்கோலக்காவும் சென்று வாருங்கள். அங்கே ஈசன் நிகழ்த்திய அற்புதத்தை நினைத்து மகிழ்ந்து அத்தலப் பதிகத்தப் பாடிப் பயன்பெறுங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User