Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

May 05, 2026 - 09:02
0
Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஏதும் உள்ளனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் சீக்கிரம் வறட்சி (Dehydration) அடையும் என்பதால், தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெளியில் வெப்பம் உச்சத்தில் இருப்பதால், நம் உடலின் வெப்பநிலையைச் சரியான அளவில் வைத்திருக்க நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருக்க மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை (சர்க்கரை நோய் இல்லாதவர்கள்) தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற சீசன் பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா மற்றும் காரம் அதிகமுள்ள உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அசைவ உணவுகளைச் செரிக்க உடல் அதிக வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். அவை செரிமானமாவதற்குச் சிரமமாகவும் இருக்கும். கோடைக்காலத்தில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளையும் தவிர்ப்பது  மிகவும் நல்லது. குறிப்பாக, வெளியிடங்களில் விற்கப்படும் உணவுகளை (Outside Food) அறவே தவிர்க்க வேண்டும்.

கோடைகாலத்தில் செரிமானக் கோளாறுகள் (Indigestion) மற்றும் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் பொரித்த உணவுகள் (Deep fried food) மற்றும் கடைகளில் விற்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது, குறிப்பாக இரவு நேரங்களில் தாமதமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். 

ஆல்கஹால், காபி போன்றவை, உடலின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். 

தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் சிறுநீர் அடர்த்தியாகி, சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில்  சிறுநீரகத் தொற்று (UTI) முக்கியமானது. தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் சிறுநீர் அடர்த்தியாகி, சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெயில் காலத்தில் ஒருவித மந்தமான உணர்வு (Sluggishness) ஏற்படும். அதிகப்படியான வியர்வையினால் உடல் சோர்ந்து, நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) உண்டாகும். அதைத் தவிர்க்க திரவ உணவுகள் அதிகம் குடிக்க வேண்டும். வெயிலில் இருந்து வந்தவுடன் உடனடியாக  ஐஸ் வாட்டர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

வெளியிலிருந்து வந்த பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை காத்திருந்து, முதலில் சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரைப் பருக வேண்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் குளிர்ந்த நீரைக் குடிக்கலாம். 

வெப்பமான நிலையிலிருந்து வந்ததும் உடனே குளிர்ந்த நீரை அருந்துவது சில நேரங்களில் மூச்சுத்திணறல் (Choking) போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். திடீர் வெப்ப மாற்றத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சளி பிடிக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இந்தத் தவற்றைச் செய்யாதிருப்பது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User