"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." - 'வாணி ராணி' ஜெனிப்ரியா

Jun 08, 2026 - 18:01
0
"ஆடிட்டருடன் திருமணம்... பத்து பேருக்கு மேல கூப்பிடலை; ஏன்னா..." -  'வாணி ராணி' ஜெனிப்ரியா

'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஜெனிப்ரியா என்ற சாராவுக்கு மோகன் சுந்தர் என்பவருடன் சென்னை அம்பத்தூரிலுள்ள அம்மன் கோவில் ஒன்றில் வைத்து கடந்த வாரம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தில் இரு தரப்பிலும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

சீரியல்கள் மற்றும் சில படங்களிலும் நடித்து வந்த சாரா ஒருகட்டத்தில் சொந்தமாக மேக் அப் ஸ்டூடியோ தொடங்கி செலிபிரிட்டிகள் மேக் அப், மேக் அப் பயிற்சி வகுப்பு எனப் பிசியாக இருந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் வைத்து இவருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த நேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

ஆனால் திருமணத்துக்குச் சில தினங்களுக்கு முன்பாக நேசன் தன்னை ஏமாற்றி தன் நகைகளையெல்லாம் பறித்துச் சென்று விட்டதாகக் கூறிய சாரா, நேசன் மீது போலீஸில் புகாரும் கொடுத்தார்.

அந்தச் சமயத்தில் சாராவிடம் நாம் பேசியிருந்தோம்.

ஜெனிப்ரியா
ஜெனிப்ரியா

''திட்டமிட்டு என்னை ஏமாத்திருக்குது நேசன் குடும்பம். மேட்ரிமோனி மூலம்தான் அவர் எனக்கு அறிமுகமானார். ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் ஆனவர். அந்த டாகுமென்ட்ஸ்னு சில பேப்பர்களைக் காமிச்சார். ரெண்டு பையன்களுடன் கஷ்டப்படுகிறவர்னதும் எனக்கு அவர் மேல ஒரு சாஃப்ட் கார்னர் உருவாச்சு. அப்பக்கூட வரதட்சனையா இருநூறு சவரன் வரை கேட்டாங்க. என்னால நூறு வரைக்கும் போட முடியும் சொன்னேன். அதுக்குச் சம்மதிக்கவே கல்யாண ஏற்பாடு நடந்துச்சு.

கல்யாணத்துக்கு முந்தைய ப்ரீவெட்டிங் ஷூட்டுக்காக நான் கிளம்பி சிங்கப்பூர் போனேன். அங்க போன பிறகே இவர் பத்தி நிறைய அதிர்ச்சித் தகவல்கள் எனக்குத் தெரிய வந்துச்சு.

அவர் சொந்தக்காரங்கன்னு யார் வீட்டுக்கெல்லாம் என்னைக் கூட்டிட்டுப் போனாரோ அவங்களேதான் அந்தத் தகவல்களைச் சொன்னாங்க. அவரது நோக்கமே பணம் பறிக்கறதுதான்னு தெரிஞ்சதால் வேற வழி இல்லாம கல்யாணத்தை நிறுத்திட்டோம். அதுக்குள்ள என் நகைகளைச் சுருட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டார்'' எனப் பேசியிருந்தார் சாரா.

இந்தச் சூழலில்தான் தற்போது பழைய கசப்பான அனுபவத்திலிருந்து மீண்டு புதிய திருமண வாழ்வில் நுழைந்துள்ளார்.

ஜெனிப்ரியா

சாராவிடமே பேசினோம்.

''மோகன் சுந்தர் ஆடிட்டரா இருக்கார். தனியா கம்பெனியும் வச்சிருக்கார். நாங்க பரஸ்பரம் அறிமுகம் ஆனதும் ஒருத்தருக்கொருத்தர் சந்திச்சு மனசு விட்டுப் பேசினோம்.

அவங்கவங்க தொழில், குடும்பம், கடந்த காலம்னு எல்லாம் குறித்தும் ஷேர் பண்ணிக்கிட்டதுல நல்ல ஒரு புரிதல் எங்களுக்கிடையில் உண்டாச்சு.

அதனால சேர்ந்து வாழறதுன்னு முடிவு செஞ்சோம்.

கடந்த சில வருடங்களா கொஞ்சம் நெகட்டிவிட்டி சூழ்ந்திருந்ததால் திருமணத்தை சிம்பிளாச் செய்துடலாம்னு தோணுச்சு. பத்து பேர் வரைக்கும்தான் கல்யாணத்துல கலந்துகிட்டாங்க. டிவி, சினிமா சைடுல இருந்தும் யாரையும் கூப்பிடலை.

சீக்கிரத்துலயே ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்யலாம்னு இருக்கோம். அப்ப எல்லாரையும் இன்வைட் பண்ணலாம்னு இருக்கோம்'' என்கிறார் சாரா.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User