``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

Jul 20, 2026 - 17:31
0
``முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலக்க கேரள அரசு அனுமதிக்கக் கூடாது" - ஜெகநாத் மிஸ்ரா

தமிழக–கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.

இந்த நிலையில், அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம், ஒண்ணாம் மயில், வள்ளியகண்டம், மன்னாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள், குடியிருப்புகள் மற்றும் பொது கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முல்லைப் பெரியாற்றில் நேரடியாக கலப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின் பேரில்,
 நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என். ஆனந்த், கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மான் ஜோசப்பை தொடர்புகொண்டு, முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழலில், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேற்று அதிகாலை குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

"தென் தமிழக மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை நீரில், வீடுகள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் பொது கழிப்பிடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக கலப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

எவ்வித மனசாட்சியும் இல்லாமல் குடிநீரில் எப்படி கழிவு நீரை கலக்க மனம் வந்தது. இந்த நீரையே தமிழகத்தின் 5 மாவட்ட மக்கள் குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களின் உடல்நலன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு தலைமதகு பகுதியில் உள்ள குமுளி, தேக்கடி, ஆணவச்சல், அட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல ஆண்டுகளாக ஆற்றில் கலப்பதை கடந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் சென்றதால் தான் இந்த நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வரும் ஆற்று நீர் மாசடைந்து கழிவுநீராக மாறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

 இதனால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதை பார்க்கும் ஒவ்வொரு தமிழக மக்களின் மனதும் வேதனை அடைகிறது.

எனவே, கேரள அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக தலையிட்டு முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை முழுமையாக தடுக்க வேண்டும். கழிவுநீரை சுத்திகரிப்பு செய்தாலும் அந்த நீரை உங்களின் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த கழிவுநீர் முல்லைப் பெரியாற்றில் கலக்க அனுமதிக்கக் கூடாது.

தமிழக மக்களின் குடிநீர் உரிமையையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க கேரள அரசு போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்." இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User