கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

Mar 15, 2026 - 10:02
 0
கரூர்: கல்லூரி பேருந்து மீது மோதிய ரயில்; 23 மாணவர்கள் காயம்; ஆளில்லாத லெவல் கிராசிங்கால் விபத்து

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த 23 மாணவர்கள் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

க.பரமத்தி பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை பெரியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார்.

கல்லூரி பேருந்து ரயில் மோதி விபத்து
கல்லூரி பேருந்து ரயில் மோதி விபத்து

குளத்தூர் பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங் பாதையை ஓட்டுநர் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த சரக்கு ரயில் பேருந்தின் மீது பலமாக மோதியது.

விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பேருந்திற்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 21 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்லூரி பேருந்து ரயில் மோதி விபத்து
கல்லூரி பேருந்து ரயில் மோதி விபத்து

முதற்கட்ட விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு புலியூர் சிமெண்ட் ஆலைக்குச் சென்ற சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0