காரைக்குடி: கிண்டலுக்கு பதில் `வெற்றி' ; மாங்குடி, சீமான் என வலுவானவர்களையே வீழ்த்திய பிரபு யார்?

May 06, 2026 - 11:02
0
காரைக்குடி: கிண்டலுக்கு பதில் `வெற்றி' ; மாங்குடி, சீமான் என வலுவானவர்களையே வீழ்த்திய பிரபு யார்?

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக - அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக 'ஆப்பு' வைத்திருக்கிறது தவெக.

ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது 'வெற்றிக் கோட்டையாக' மாற்றியிருக்கிறார் தளபதி விஜய்.

தமிழகமே உற்றுநோக்கிய ஸ்டார் தொகுதி காரைக்குடியில், அதிரடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் தவெக-வின் டி.கே. பிரபு. ஜெர்மனி, லண்டன் எனப் பட்டம் பெற்ற பல் மருத்துவரான இவரை, தொடக்கத்தில் ‘ரீல்ஸ் டாக்டர்’ என்று கிண்டல் செய்தவர்கள் உண்டு.

தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் காங்கிரஸின் பாரம்பரியக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்.

இவருடைய தந்தை துரை கருணாநிதி, தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் முன்னரே நன்கு அறிமுகம் பெற்றவர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களிலும் களத்திலும் சளைக்காமல் சுழன்றவர். காரைக்குடியில் உயர்தர நவீனத் தரத்தில் பிரமாண்டமான டென்டல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். தவெகவில் இணைந்து சிவகங்கை மாவட்டச் செயலாளராக கட்சிப் பணியாற்றி வருகிறார்.

சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ மாங்குடி, அமமுக-வின் தேர்போகி பாண்டி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தனிப்பெரும் பிம்பமாக நின்ற சீமான் என நான்கு முனைப் போட்டியில் அத்தனை ஜாம்பவான்களையும் தட்டித் தூக்கி 'தவெக' கொடியை நாட்டியிருக்கிறார்.

பிரசாரத்துக்காக காரைக்குடி வந்த விஜய் மதுரை விமான நிலையத்திலிருந்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு வந்து சேரவே நேரம் கடந்துவிட்டது. இதனால் விஜய் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததால் சைக்கிளிலிலேயே சிறிது நேரம் வலம் வந்து பிரசாரத்தை முடித்துவிட்டுப் போயிருந்தார்.

காரைக்குடி வட்டாரத்தின் அனைத்துப் பகுதி மக்களிடமும் தேர்தலுக்கு முன்னதாகவே தனது பெயரை கொண்டு போய்ச் சேர்த்திருந்தார். அதனால் விஜய்யின் அலையோடு சேர்த்து பிரபுவுக்கு எளிதாக வெற்றி கிட்டியது.

கிண்டல் செய்தவர்களுக்குத் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்திருக்கும் இந்த 42 வயது டாக்டர், தற்போது காரைக்குடியின் புதிய ‘ஹீரோ’. குடும்பத்தின் பெரும் ஆதரவோடு, தொகுதி மக்களின் மனதில் இடம்பிடித்துச் சட்டமன்றத்திற்குப் புறப்பட்டுவிட்டார் இந்த மாடர்ன் அரசியல்வாதி!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User