ஐபோன், ஆண்ட்ராய்டு போன்கள் விலை உயர்வு; AI தான் காரணமா? டெக் உலகில் என்ன நடக்கிறது?

Jun 20, 2026 - 16:31
0
ஐபோன், ஆண்ட்ராய்டு போன்கள் விலை உயர்வு; AI தான் காரணமா? டெக் உலகில் என்ன நடக்கிறது?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் உலகம் முழுவதும் மெமரி சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக ஐபோன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலை விரைவில் கடுமையாக உயர உள்ளது. இது குறித்து வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஆப்பிள் தயாரிப்புகளின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது" என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம் நாமெல்லாம் கொண்டாடும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான். AI தொழில்நுட்பத்தை இயக்க பெரிய அளவிலான டேட்டா சென்டர்கள், சர்வருக்கு அதிக திறன் கொண்ட ரேம், ஸ்டோரேஜ் சிப்கள் தேவைப்படுகின்றன.

Smartphones
Smartphones

இதனால் சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை லாபம் தரும் AI சர்வருக்கு திருப்பி விட்டுள்ளன. எனவே ஸ்மார்ட்போன், லேப்டாப்களுக்குத் தேவையான மெமரி சிப்களுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை அக்டோபர் 2025 முதல் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது.

இதுவரை இந்த உதிரிபாகங்களின் விலை ஏற்றத்தை ஆப்பிள் நிறுவனமே ஏற்றுக்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சுமை இல்லாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், தற்போது நிலைமை கைமீறிப் போய்விட்டதால், வேறு வழியின்றி விலையை ஏற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆப்பிள் தள்ளப்பட்டுள்ளது. வரவிருக்கும் iPhone 18 Pro மாடல்களின் விலை தோராயமாக $270 (சுமார் ₹22,500) வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

டிம் குக் இந்த மெமரி சிப் தட்டுப்பாட்டை "நூறாண்டுகளுக்கு ஒருமுறை வரும் பெருவெள்ளத்திற்கு" ஒப்பிட்டுள்ளார். மேலும், "எனது 40 வருட கால டெக் உலக அனுபவத்தில் இப்படி ஒரு அதீத தட்டுப்பாட்டையும், விலை ஏற்றத்தையும் நான் பார்த்ததே இல்லை" என்றும் கூறியுள்ளார்.

"ஆப்பிள் நிறுவனம் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து சொந்தமாக மெமரி சிப் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்குமா?" என்ற கேள்விக்கு, "எங்களுக்கு எந்த வேலை நன்றாக வருமோ அதை மட்டுமே செய்வோம், எல்லாவற்றையும் நாங்களே செய்ய முடியாது" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

tim cook
tim cook

ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து டிம் குக் செப்டம்பர் 1, 2026 அன்று விலக உள்ளார் (புதிய சிஇஓ-வாக ஜான் டெர்னஸ் வரவுள்ளார்). அதற்கு முன்பாக அவர் கொடுத்துள்ள இந்த அறிவிப்பு டெக் உலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விலை உயர்வு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, ஆண்ட்ராய்டு போன்களுக்கும் நூறு சதவீதம் பொருந்தும். உண்மையில் சொல்லப்போனால், ஆப்பிள் நிறுவனம் மட்டும்தான் தனது அதீத லாப வரம்பை பயன்படுத்தி இத்தனை மாதங்களாக விலையை ஏற்றாமல் சமாளித்து வந்தது. சாம்சங், ஷாவ்மி, ஒன்பிளஸ், ஒப்போ போன்ற முன்னணி ஆண்ட்ராய்டு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது புதிய ஃபிளாக்‌ஷிப் போன்களின் விலையை கணிசமாக உயர்த்திவிட்டன.

ஆண்ட்ராய்டு போன்களுக்கும் ரேம், ஸ்டோரேஜ் சிப்களை வழங்குவது அதே விநியோகஸ்தர்கள்தான். எனவே, மெமரி சிப் விலை உயர்வு ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன், லேப்டாப் சந்தையையும் கடுமையாக பாதித்துள்ளது. இனி வரும் காலங்களில் வெளியாகும் மிட்-ரேஞ்ச் ஆண்ட்ராய்டு போன்களின் விலையும் நிச்சயம் அதிகரிக்கும்.

IC chips
IC chips

நாமெல்லாம் ஆவலோடு விரும்பும் AI தொழில்நுட்பமே இப்போது நமது ஸ்மார்ட்போன்களின் விலையை உயர்த்தும் வில்லனாக மாறியுள்ளது. மெமரி சிப்களின் விலை 2027 வரை சீராக வாய்ப்பில்லை என சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர். எனவே, நீங்கள் புதிய ஐபோன், மேக்புக் அல்லது விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், விலை இன்னும் உயர்வதற்கு முன்பாக இப்போதே வாங்கிவிடுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User