``இன்னும் அவர் தன்னை அமைச்சராகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்" - TRB ராஜா குறித்து அமைச்சர் கீர்த்தனா!

Jun 20, 2026 - 19:31
0
``இன்னும் அவர் தன்னை அமைச்சராகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்" - TRB ராஜா குறித்து அமைச்சர் கீர்த்தனா!

தமிழ்நாட்டில் துவங்கவிருந்த நிறுவனங்கள் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் புகார்கள் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக சிவகாசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ``சமீபத்தில் தென்கொரியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட தமிழகக் குழுவினர், அங்குள்ள 'ஹூண்டாய் ஹெச்டி' (Hyundai HT Hyundai), 'மோதிலிங்' மற்றும் 'ஹியூசாங்' (Hyosung) ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் முக்கியப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்
அமைச்சர் கீர்த்தனா - முதல்வர் விஜய்

இந்த நிறுவனங்களின் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாக்கள் விரைவில் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கின்றன. கடந்த 30 நாட்களில் மட்டும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களைச் சந்தித்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் அளவிற்குப் புதிய அரசு தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் துவங்கவிருந்த சில நிறுவனங்கள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் விமர்சனங்களுக்கு, உரிய நேரத்தில் சட்டமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுக்கப்படும்.

ஒரு பெரிய நிறுவனம் தனது முதலீட்டைத் தீர்மானிப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பல்வேறு நீண்ட நடைமுறைகள் தேவைப்படுகின்றன. முந்தைய ஆட்சியின்போது ஏற்பட்ட இத்தகைய காலதாமதங்கள் காரணமாகவே சில நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்றன என்பதற்கான தேதி மற்றும் காரணங்கள் அடங்கிய காலவரிசை ஆதாரங்கள் தற்போது புதிய அரசிடம் தயாராக உள்ளன.

தி.மு.க-வைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா இன்னும் தன்னைத் தொழில் துறை அமைச்சராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். மக்கள் மாற்றத்தை விரும்பி அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்ட யதார்த்தத்தை அவர் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டை '1.5 டிரில்லியன் டாலர்' பொருளாதாரமாக மாற்றுவதே தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய்யின் இலக்கு. அதற்கான தொலைநோக்கு ஆவணம் விரைவில் பொதுவெளியில் வெளியிடப்படும்.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் GSDP வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் பின்தங்கியது என்ற கேள்வி இருக்கிறது. முந்தைய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் சுமையைச் சுமக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய தி.மு.க ஆட்சியில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் சில தனிநபர்கள் மூலமாகப் புதிய அரசுக்குக் குடைச்சல்களும், சமூக வலைத்தளங்களில் ட்ரோல்களும் (Trolls) பரப்பப்பட்டு வருகிறது. 5 ஆண்டு காலம் மக்களை ஏமாற்றியதால்தான் மக்கள் தி.மு.க-வை நிராகரித்து, புதிய மாற்றமாகத் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். மக்கள் தந்த தீர்ப்பை மதிக்காமல் 'தற்குறிகள்' என விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் இழிவுபடுத்துவதாகும்.

trb Raja
trb Raja

தமிழ்நாடு வரலாற்றிலேயே முதன்முறையாக ஊழலற்ற, நேர்மையான ஒரு நிர்வாகத்தை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கி வருகிறார். சாதி, மதம், பின்னணி என எதையும் பார்க்காமல், மக்கள் சேவை செய்ய விரும்பும் சாதாரண எளிய மக்கள் மற்றும் இளைஞர்களும் கூட எதிர்காலத்தில் எம்.எல்.ஏ ஆக முடியும் என்ற அரசியல் மாற்றத்தைத் தற்போதைய முதல்வர் தமிழ்நாட்டில் விதைத்துள்ளார். இந்த ஆரோக்கியமான மாற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User