Habeebi: ''நான் 10-வது படிக்கும்போது நடிச்ச படம் இது..!" - மாளவிகா மனோஜ் பேட்டி

Jun 09, 2026 - 19:00
0
Habeebi: ''நான் 10-வது படிக்கும்போது நடிச்ச படம் இது..!" - மாளவிகா மனோஜ் பேட்டி

'ஜோ', 'ஆண் பாவம் பொல்லாதது' என இரண்டு ஹிட் படங்களை கொடுத்து தமிழ் மக்களுக்கு ஃபேவரைட்டாகி மிளிர்கிறார் நடிகை மாளவிகா மனோஜ்.

இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'ஹபீபி' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Habibi Movie
Habibi Movie

இதுதான் மாளவிகா மனோஜ் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுதான். ஆனால், ரிலீஸில் கொஞ்சம் தள்ளிப் போய் இப்போது திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்காக மாளவிகா மனோஜை பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், "'ஹபீபி' படத்துக்குத் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள்கிட்ட இருந்து நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. நான் இன்னும் படத்தைப் பார்க்கல. ஆனா, படத்தைப் பார்த்த இயக்குநர்கள், இப்படி முழுக்க முழுக்க இஸ்லாமிய வாழ்வியலை எந்தப் படமும் காட்டலைனு பாராட்டுறாங்க.

அதையே நானும் உணர்றேன். சொல்லப்போனால், தமிழ்ல நான் முதன்முதல்ல கமிட்டான திரைப்படம் இதுதான். இந்தப் படத்துல நடிக்கும்போது நான் 10-வது படிச்சிட்டு இருந்தேன்.

அதனாலேயே, படம் தொடர்பான நிறைய நினைவுகள் எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா, இந்தப் படத்துக்காக நான் கடினமா உழைச்சிருக்கேன். கிராமப்பகுதியில இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

Malavika Manoj Interview
Malavika Manoj Interview

அங்க கேரவான் மாதிரியான பெரிய வசதிகள் எதுவும் இருக்காது. ரெண்டு பேர் மட்டுமே நிற்க இடமுள்ள சின்ன ரூம்ல நிறைய பேர் நின்னு ஷூட் செய்திருக்கோம். படப்பிடிப்புத் தளத்துல எல்லோரும் காலையில ரெஸ்ட் ரூம் போனப் பிறகு மறுபடியும் மாலை நேரத்துலதான் போக முடியும்.

இது சின்ன விஷயங்களாகத் தெரியலாம். ஆனா, இப்படியான விஷயங்களை நாங்க சந்திச்சிருக்கோம். இது என்னை அடுத்தடுத்த படங்களுக்குத் தயார் செய்ததுனும் சொல்லலாம்," என்றவர், "'ஜோ' படத்துல இருந்துதான் என்னுடைய கரியர் தொடங்குச்சுனு சொல்லலாம்.

அதிலிருந்துதான் நானாக ஒரு மெச்சூர் நிலையில இருந்து யோசித்து நடிக்கத் தொடங்கினேன்.

மலையாளத்துல நான் செய்த முதல் படத்துல என்னுடைய ஸ்கிரீன் ஸ்பேஸ் பெருசா இருக்காது. அந்தப் படத்துல இயக்குநர் சொன்னதை மட்டும் நான் செய்தேன். அதே மாதிரிதான் இந்த 'ஹபீபி' படத்துக்கும் செய்தேன். 'ஜோ' படத்திலும் கிட்டத்தட்ட அதையேதான் நான் செய்தேன்னு சொல்லலாம்.

ஆனா, எனக்கு இருக்கிற சந்தேகங்களைப் பற்றி கேள்வி கேட்டு நடிக்கிற லெவலுக்கு அந்தப் படத்துல நான் வந்தேன். படத்தைப் பார்த்த இயக்குநர்கள் எனக்குப் பாராட்டு தெரிவிக்கிறாங்க! அது பெரிய சந்தோஷமான விஷயம். இந்தப் படத்தின் வாழ்வியலுக்கேற்ப என்னைத் தயார்ப்படுத்திக்க நான் பெருசா எதுவுமே செய்யல. ஏன்னா, இந்த வாழ்க்கைமுறை எனக்கு ஏற்கெனவே பரிச்சயம்தான்.

Malavika Manoj Interview
Malavika Manoj Interview

நான் சின்ன வயசுல சௌதி அரேபியாவுலதான் வளர்ந்தேன். அங்கதான் நான் ஸ்கூலிங் பண்ணினேன். அங்கிருக்கும் என்னுடைய நண்பர்களுடன் நான் நெருங்கிப் பழகியதால, எனக்கு அந்த வாழ்க்கைமுறை ரொம்பவே பரிச்சயம்தான். அதே சமயம், கேரளாவுல நாங்க மலாபார்ல இருக்கோம். அங்கும் இஸ்லாமியர்தான் அதிகம். அதனால், அப்படியான சூழலில்தான் நான் தொடர்ந்து இருந்து வர்றேன்," என்றார்.

மேலும் தொடர்ந்து பேசியவர், அவர் பெயரைச் சுற்றி நிலவும் குழப்பங்கள் பற்றியும், அதனால் ஏற்பட்ட ஒரு சம்பவத்தையும் விவரித்தார். அவர், "என்னுடைய நண்பர்களுக்கு, சுற்றத்தினருக்கு நான் எப்போதும் மாளவிகாதான். ஆனால், சில இடங்கள்ல பெயர் மாத்தி புரிஞ்சுக்குவாங்க.

ஒரு முறை மாளவிகா மோகனன்னு நினைச்சு என்னுடைய அப்பாவுக்குக் கால் பண்ணி பேசியிருக்காங்க," என்றவர், "மக்கள்கிட்ட இருந்து தொடர்ந்து பாராட்டுகள் கிடைக்கிறதுல ரொம்ப சந்தோஷம். அவங்க மனசுல 'கேர்ள் நெக்ஸ்ட் டோர்' மாதிரி நான் பரிச்சயமானதை நினைச்சு சந்தோஷப்படுறேன்.

Malavika Manoj Interview
Malavika Manoj Interview

'ஜோ' படத்தின் ரிலீஸ் சமயத்துல சிவகார்த்திகேயன் சாரும், ரியோகிட்ட, 'இந்தப் பொண்ணு கேர்ள் நெக்ஸ்ட் டோர் மாதிரியான முகமாக இருக்காங்க'னு சொல்லியிருக்கார்.

அதை எனக்குக் கிடைச்ச பாராட்டுகள்ல முக்கியமானதாகப் பார்க்கிறேன். நான் ரொம்ப யங்காகத் தெரியுறது பிளஸ் பாயின்ட்டா இருந்தாலும், சில சமயங்கள்ல 'பார்க்கக் குட்டியாக இருக்கேன்'னு சொல்லி சில ரிஜெக்ஷன்ஸும் நடந்திருக்கு," என்றார்.

முழு பேட்டியை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User