Habeebi: "அஜித் கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது!" - அனுபவம் பகிரும் டி.வி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீது

Jun 17, 2026 - 11:02
0
Habeebi: "அஜித் கேரக்டரில் நான் நடிக்க வேண்டியது!" - அனுபவம் பகிரும் டி.வி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீது

இஸ்லாமியர்களின் வாழ்வியலை முழுமையாகப் பேசும் தமிழ் படைப்பாக வெளிவந்திருக்கிறது மீரா கதிரவனின் 'ஹபீபி'.

இந்தப் படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீதும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஷாகுல் ஹமீது, சன் டிவி-யில் ஒளிபரப்பான 'சென்ற வார உலகம்' உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமான முகமானார். 'ஹபீபி'க்கு வாழ்த்துகள் சொல்லி அவரிடம் பேசினோம்.

Shahul Hameed - Habeebi Movie
Shahul Hameed - Habeebi Movie

நம்மிடையே பேசியவர், "''ஹபீபி' திரைப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்து வருகிறார்கள். 1980-களில் இருந்து இன்று வரை கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்த இஸ்லாமியவர்களின் வாழ்வியலையும் பேசுகிறது இந்தப் படைப்பு. அதன்பின் 1990-களில், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்றனர்.

இதனால் கணவர்கள் பல ஆண்டுகள் குடும்பத்தைப் பிரிந்து வாழ வேண்டியிருந்தது. 2000-களுக்குப் பிறகு, அங்கிருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கே திரும்பத் தொடங்கினர்.

இவை அனைத்தையும் நேர்த்தியாக 'ஹபீபி' திரைப்படம் பதிவு செய்திருக்கிறது." என்றவர், "என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் 'ஹபீபி' மிக முக்கியமான படைப்பு. இதில் வரும் மனிதர்கள் ஏதோ தனி உலகத்தில் வாழ்பவர்கள் அல்ல.

Shahul Hameed - Habeebi Movie
Shahul Hameed - Habeebi Movie

எல்லோரைப் போலவும் சாதாரண மனிதர்கள்தான். சென்னையில் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, கடையநல்லூருக்கே நேரடியாகச் சென்று வந்த உணர்வு தருவதாகக் கூறுகிறார்கள்.

தென் மாவட்ட மக்கள், 'எப்போது பார்த்தாலும் கொலை, குத்து, வெட்டு, ரத்தத்தையே பார்த்து அலுத்துவிட்டோம். தியேட்டருக்குள் நிம்மதியாக வந்து பார்க்கக்கூடிய, மனதிற்கு ஆறுதல் தரும் ஒரு ரம்மியமான படமாகவும் இது இருக்கிறது' என்கிறார்கள். இதைத்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த முக்கியப் பாராட்டாகப் பார்க்கிறோம்" என்றார்.

'தொலைக்காட்சிகளில் பிரபலமாக இருந்த உங்களுக்கு முன்பே நடிக்கும் வாய்ப்பு வந்திருக்குமே, 'ஹபீபி'யைத் தேர்வு செய்ததற்குக் காரணம் என்ன?" என்கிற கேள்வியை எழுப்பினோம்.

அதற்குப் பதில் தந்தவர், "(சிரித்துக்கொண்டே...) நான் 'ஹபீபி' படத்தைத் தேர்வு செய்யவில்லை. 'ஹபீபி' திரைப்படம்தான் என்னைத் தேர்வு செய்தது எனலாம். உண்மையில் எனக்கு 1990-களிலேயே பெரிய பட வாய்ப்புகளெல்லாம் வந்தன. நான் என் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால், என் மீது அதீத பாசம் கொண்ட என் அம்மா என்னைச் சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை.

அப்படி நான் தவறவிட்ட இரண்டு முக்கியமான திரைப்படங்கள்தான் பாரதிராஜா சாரின் 'கருத்தம்மா' மற்றும் வசந்த் சாரின் 'ஆசை'.

Shahul Hameed - Habeebi Movie
Shahul Hameed - Habeebi Movie

இரண்டு படங்களிலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியது. பாரதிராஜா சாருடைய மறைவு என்னை பர்சனலாக ரொம்பவே உலுக்கிவிட்டது. அவர் கூப்பிட்டும் நம்மால் நடிக்கப் போகமுடியவில்லையே என்கிற ஆதங்கமும் எனக்குள் எழுந்தது.

நான் விளம்பரப் படங்களில் நடிக்கும்போது என்னுடன் பழக்கமான என் நண்பர் வீரசிங்கம் மூலமாகத்தான் என் புகைப்படங்கள் பாரதிராஜா சாரிடம் சென்றன. அதேபோல் 'ஆசை' படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்திற்காக, வசந்த் சாரின் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த எஸ்.ஜே.சூர்யா என்னை அணுகினார். ஆனால், அப்போதும் அம்மாவின் அனுமதி கிடைக்காததால் நடிக்கப் போக முடியவில்லை. இப்படி சினிமா வாய்ப்புகளிடம் நெருங்காமல் ஊடகத் துறையிலேயேதான் தொடர்ந்து இயங்கி வந்தேன்.

தொலைக்காட்சிகளில் தொடர்ந்து 18 ஆண்டுகள் பணியாற்றினேன். 2010-க்குப்பிறகு இன்று வரை ஃப்ரீலான்ஸ் ஆங்கராகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட்டாகவும் இருந்து வருகிறேன். யூடியூப் தளங்களில் பாட்காஸ்ட் மற்றும் நேர்காணல்களைச் செய்து வருகிறேன்.

ஆனால், 'ஹபீபி' படத்திற்கான வாய்ப்பு என்னிடம் வந்தபோதும், 35 ஆண்டுகளுக்கு முன்பு என்ன பதிலைச் சொன்னேனோ, அதையேதான் அப்போதும் சொன்னேன். 'என் அம்மாவிடம் நீங்கள் அனுமதி வாங்கிவிடுங்கள்' என்றேன்.

அவர்களும் என் அம்மாவிடம் இந்தப் படத்தைப் பற்றி முழுமையாக விளக்கியிருக்கிறார்கள். இக்கதையில் நடிப்பதற்கு என் அம்மா க்ரீன் சிக்னல் தந்துவிட்டார். அப்படித்தான் நான் 'ஹபீபி' குழுவுக்குள் இணைந்தேன்."எனத் தொடர்ந்து பேசினார்.

Shahul Hameed - Habeebi Movie
Shahul Hameed - Habeebi Movie

"இஸ்லாமியர்களைத் தவறாகப் சித்தரித்தத் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், அதற்கு இன்னொரு சினிமாவை வைத்துதான் பதில் சொல்ல வேண்டும்.

அதே மாதிரி, ஒரு படத்தில் தவறான விஷயங்களை வைக்கும்போது, உண்மை இதுதான் எனக் காட்டுவதற்கு நாம் சரியானப் படத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால் இங்கு முஸ்லீம் சமூகத்தில் ‘சினிமா என்றாலே ஹராம்’ என்கிற ஒரு கூற்று மத போதகர்களால் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சினிமா என்பது ஒரு ஒதுக்கப்பட்ட துறையாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், வெகு சிலர் மட்டும்தான் சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு அதற்குப் பதில் சொல்ல முற்படுகிறார்கள்.

ஆனால், பதில் சொல்வதற்கு இஸ்லாமியா சமூகத்திலிருந்து எத்தனை பேர் சினிமாவில் இருக்கிறார்கள்?! ஆனால், சினிமாவில் ஒரு விஷயத்தைத் தவறாகப் போர்ட்ரே பண்ணும்போது, உண்மை என்ன என்பதை எதார்த்தமான சினிமாக்கள் மூலமாகத் தானே நாம் உலகிற்குப் புரிய வைக்க வேண்டும்!" எனக் கேள்விகளை அடுக்கினார்.

அவருடைய ஊடகப் பயணம் பற்றி, "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் தனிப்பட்ட முறையில் செய்தி வாசிப்பதில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை.

மக்களுக்குப் பயனுள்ள நேர்காணல்கள் செய்வது, ஸ்போர்ட்ஸ் குவிஸ் நடத்துவது, 'டாப் 10 மூவிஸ்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதுதான் பிடிக்கும்.

புதிய மனிதர்களைச் சந்தித்து அவர்களின் அனுபவங்களைக் கற்றுக்கொள்வது எனக்குள் ஒரு மன அமைதியைத் தரும். ஆனால், நான் விரும்பாமல் செய்யத் தொடங்கிய நிகழ்ச்சிதான் 'சென்றவார உலகம்'.

சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சிதான் எனக்கு மிகப்பெரிய பிரபலத்தை தேடித்தந்தது. 15 வருடங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியை நாங்கள் தொடர்ந்து செய்தோம்." என்றவர், "இன்றைக்கு இருக்கக்கூடிய மீடியா துறை ரொம்பவே வளர்ந்துவிட்டது.

ஹபீபி படத்தில்...
ஹபீபி படத்தில்...

ஊடகங்கள் பல கிளைகளுடன் படர்ந்திருக்கிறது. அதற்கேற்ப தொழில்நுட்பங்களும் இன்று பெருகிவிட்டன. ஆனால், இதில் சில மைனஸ் விஷயங்களும் இருக்கின்றன. இன்றைய 'ஜென் - ஸி' தலைமுறைக்கு எதையும் பொறுமையாகக் காத்திருந்து பார்க்கும் சுவாரஸ்யம் தெரியவில்லை.

அரை மணி நேர நிகழ்ச்சிகள், 10 நிமிடங்களாகக் குறைந்து, இன்று ஒரு நிமிட ரீல்ஸாகவும் மாறிவிட்டது. இளைஞர்களிடம் கொஞ்சம் பொறுமையும், விஷயங்களை ஆழமாக அணுகும் பழக்கமும் வளர வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User