தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

Jul 08, 2026 - 23:02
0
தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்; கொப்பரை, தோட்டாபுரி மாம்பழம் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், கொப்பரை தேங்காய் மற்றும் தோட்டாபுரி மாம்பழங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்த பரிந்துரையின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டிற்கான கொப்பரை கொள்முதல் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 87,226 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்படும். இதில் 87,000 மெட்ரிக் டன் மில்லிங் கொப்பரையும், 226 மெட்ரிக் டன் பால் கொப்பரையும் அடங்கும்.

விவசாயம்
விவசாயம்

இந்த கொள்முதல் முழுவதும் விலை ஆதரவு திட்டத்தின் (Price Support Scheme - PSS) கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலையான (MSP) அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.1,049.16 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

சந்தை விலை சரிவால் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுக்கவும், கொப்பரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனுடன், தமிழகத்தில் 2026ஆம் ஆண்டில் 96,879 மெட்ரிக் டன் தோட்டாபுரி மாம்பழங்களையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்தை தலையீட்டு திட்டத்தின் (Market Intervention Scheme - MIS) கீழ் இந்த கொள்முதல் மேற்கொள்ளப்பட உள்ளது.

தோட்டாபுரி மாம்பழங்களுக்கான தலையீட்டு விலை குவிண்டாலுக்கு ரூ.1,545.41 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை திடீர் சரிவால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சிவராஜ் சிங் செளகான்

கொப்பரை மற்றும் தோட்டாபுரி மாம்பழங்களுக்கான இந்த பெருமளவிலான கொள்முதல் நடவடிக்கை, தமிழக விவசாயிகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கொப்பரை கொள்முதலுக்காக ரூ.1,049.16 கோடிக்கும் அதிகமான ஆதரவு வழங்கப்படுவது, விவசாயிகளின் வருமானத்தை பாதுகாப்பதுடன், கிராமப்புற பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User