Finance with Harish : Cyber Bullying-ஆல் இறந்தாரா? `முதலமைச்சரை தெரியும்' என மிரட்டல்? | Full Detail

Oct 21, 2026 - 18:30
0
Finance with Harish : Cyber Bullying-ஆல் இறந்தாரா? `முதலமைச்சரை தெரியும்' என மிரட்டல்? | Full Detail

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக, ‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்னும் பெயரில் சமூக வலைதளங்களில் நிதி சார்ந்த டிப்ஸ், அறிவுரை வீடியோக்களைப் பேசி, வெளியிட்டு வந்தவர் ஹரிஷ்.

இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ஃபாலோயர்கள்.

இவருடைய வீடியோக்களில் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் சார்ந்த வீடியோக்களும் இடம்பெறும்.

இதைப் பார்த்துத்தான், சமீபத்தில் யூடியூபரான ஜேசன் சாமுவேல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஜேசன் சாமுவேல்,

“நிதி ஆலோசனை வழங்குவதற்கு ஹரிஷ் செபியிடமிருந்து RIA உரிமம் பெறவில்லை. மேலும், சமீபத்தில் தான் அவர் AMFI-யிடமிருந்து ARN எண் பெற்றிருக்கிறார்.

ஆனால், முன்னரே அதைப் பெற்றுவிட்டதாக SEBI மற்றும் AMFI அமைப்பை ஏமாற்றியிருக்கிறார்” என்று பேசியிருந்தார்.

பேஜை முடக்கிய மெட்டா

'கம்யூனிட்டி கைட்லைன்ஸிற்கு எதிராகச் செயல்பட்டார்' என்று முன்பே ஃபைனான்ஸ் வித் ஹரிஷ் சமூக வலைதளப் பக்கங்களை மெட்டா முடக்கியிருந்தது.

இங்கு கம்யூனிட்டி கைட்லைன்ஸ் என்று மெட்டாவால் குறிப்பிடப்படுவது, அவரிடம் தகுந்த சான்றிதழ் இல்லாததுதான்.

இந்த நிலையில், ஹரிஷ் சென்னை முட்டுக்காடில் உள்ள அவரது வாடகை வில்லாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஹரிஷ் கடைசியாக வெளியிட்டிருந்த வீடியோவில்...

“என் மீது ஏதேனும் தவறு இருந்தால், தாராளமாக என்னிடம் கேள்வி கேட்கலாம். அதற்குப் பதில் சொல்லவும் நான் தயாராகவே இருக்கிறேன்.

மெட்டா
மெட்டா

ஆனால், என்னுடைய ஐந்து ஆண்டுக்கால உழைப்பைத் திருடியது மட்டுமன்றி, எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்துகிறார்கள்.

‘நீ பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் தானே? எனக்குப் பாண்டிச்சேரி எம்.எல்.ஏவைத் தெரியும்... முதலமைச்சரைத் தெரியும்’ என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.

‘பணம் கொடுக்காமல் எங்கே சென்றுவிடுவாய்? பணம் தராவிட்டால் உன்னிடம் உள்ள அனைத்தையும் பிடுங்கிக் கொள்வேன்’ என்ற ரீதியில் மிகவும் மோசமாகப் பேசி வருகிறார்கள்.

இதற்கு மேல் என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. இவர் கிளப்பிவிட்ட தவறான செய்திகளால், என்னால் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறதே என்ற குற்ற உணர்ச்சி எனது நண்பர்களைப் பார்க்கும்போது எனக்குள் உருவாகிறது.

‘வருமான வரித் துறை சோதனையிட்டால் 60% வரை அபராதம் விதிப்பார்கள், சிறைக்குச் செல்ல நேரிடும்’ என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

‘அதற்குப் பதிலாகப் பணத்தைக் கொடுத்துவிட்டால் இதைப் பேசி முடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் அடுத்தடுத்த பாகங்களாக’ என்று கூறி கடுமையான மன உளைச்சலையும் மிரட்டலையும் தருகிறார்கள்” என்று பேசியுள்ளார்.

ஜேசன் சாமுவேல் என்ன சொல்கிறார்?

ஹரிஷ் குறித்து வீடியோ வெளியிட்ட ஜேசன் சாமுவேல் அவரது தற்கொலைக்குப் பின், “நடந்த சம்பவத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்.

என் மனம் ஆழ்ந்த துயரத்திலும் சோகத்திலும் உள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் அவரை இணைய வழியில் அச்சுறுத்தவோ அல்லது துன்புறுத்தவோ இல்லை.

ஜேசன் சாமுவேல் வீடியோ
ஜேசன் சாமுவேல் வீடியோ

அவர் நிதி ஆலோசனை வழங்க உரிய SEBI RIA உரிமம் பெறாதது, மற்றும் சமீபத்தில் தான் ARN எண்ணைப் பெற்றிருந்தும் முன்னரே AMFI உரிமம் வைத்திருப்பதாகப் பொய்யாகக் கூறி SEBI மற்றும் AMFI அமைப்புகளை ஏமாற்றியது மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன்.

உண்மையில், எனது வீடியோவில் கூட அவர் முறையான SEBI உரிமத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வந்து பணிகளைத் தொடருமாறு தான் நான் கேட்டுக்கொண்டேன்.

இப்படி ஒரு விபரீதமான முடிவு நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை. இந்த இழப்பிற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எழும் குற்றச்சாட்டுகள்

ஹரிஷின் தற்கொலைக்குப் பின், ஜேசன் சாமுவேல் ஹரிஷை சைபர் புல்லிங் செய்ததால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்கிற பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஹரிஷின் தந்தையும் இவர் மீது தான் புகார் கூறுகிறார்.

ஆனால், வீடியோவில் ஹரிஷ் தகுந்த சான்றிதழ்களைப் பெற்ற பின் வீடியோ செய்யலாம் என்று தான் ஜேசன் கூறியிருக்கிறார் என்று ஒரு தரப்பு இவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறது.

ஜேசனின் வீடியோவிற்குப் பின், ஹரிஷைத் தாண்டி, பல பின்ஃப்ளூயன்சர்களிடம் சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன... நம்பகத்தன்மையை நிரூபிக்கச் சொல்லிக் கேட்கப்படுகின்றன.

தற்கொலை
தற்கொலை

தற்கொலை தீர்வு அல்ல

சட்ட ரீதியாகப் பார்த்தால், ஹரிஷிடம் சான்றிதழ் இருந்திருக்க வேண்டும். (அவரிடம் சான்றிதழ் இருந்ததா, இல்லையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.) அந்தச் சான்றிதழ்களை வைத்தே ஜேசனின் வீடியோவைச் சட்ட ரீதியாக அணுகியிருக்கலாம்.

ஜேசனின் வீடியோவை வைத்துப் பார்க்கும்போதும், ஒவ்வொரு பின்ஃப்ளூயன்சருக்கும் பொறுப்பு வேண்டும். பங்குகள் சம்பந்தமாகப் பேசும்போது, தகுந்த சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

காரணம், இது அவர்களின் வீடியோக்களைப் பார்க்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பணம் மற்றும் நம்பிக்கை.

ஆனால், எல்லாவற்றையும் தாண்டி, எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல..!

ஆலோசனைக்கு 104 என்ற எண்-ஐ தொடர்பு கொள்ளவும்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User