வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்... சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

Oct 21, 2026 - 14:01
0
வால்பாறை: கொண்டை ஊசி வளைவில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்... சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிக தடை!

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது திடீரென இரண்டு ராட்சத பாறைகள் சரிந்து சாலையில் விழுந்ததால், சாலையில் பிளவு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

வால்பாறை சாலை சீரமைப்பு
வால்பாறை சாலை சீரமைப்பு

இதனால் நேற்றிரவு முதல் பொள்ளாச்சியில் இருந்து வந்த வாகனங்கள் ஆழியார் வனச் சோதனைச் சாவடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த வாகனங்கள் அட்டகட்டி பகுதியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் திட்டமிட்டபடி தங்களது பயணங்களை மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். வனத்தை ஒட்டிய சாலையில் நடுவழியில் சிக்கிய சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறைகளை அகற்றி, சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். இப்பணிகளை பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

சுமார் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சாலை சீரமைக்கும் பணி நிறைவு பெற்றது. மேலும் சாலைப் பிளவு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பகுதியில் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகள் மற்றும் அறிவிப்பு தடுப்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து வால்பாறை, அட்டகட்டி, காடம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், அரசு பேருந்துகளுக்கும் மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

வால்பாறை சாலை சீரமைப்பு
வால்பாறை சாலை சீரமைப்பு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User