என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

Mar 13, 2026 - 16:30
 0
என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பாடலுக்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராப் பாடகர் அறிவு, மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார்.

அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், "அந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்தப் பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில், நானே அந்தப் பாடலின் வரிகளை எழுதி, அதன் முதன்மை மெட்டையும் அமைத்துப் பாடினேன்.

அறிவு, தீ
அறிவு, தீ

இசை என்பது ஒரு கூட்டு முயற்சிதான். ஆனால், அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இந்தப் பாடல் எனது கிராமத்தில், எனது மண்ணின் மற்றும் மக்களின் கதைகளைக் கொண்டு படமாக்கப்பட்டது.

அந்த வரலாறு மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில்தான் நான் அதைப் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாடலை முழுமையாக எழுதியும், அதன் முதன்மை மெட்டை அமைத்திருந்தும்கூட, நான் ஒரு 'Collaborating Artist' ஆக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டேன்.

அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி பெறுகிறார்கள்.

ஆனால், எனது உழைப்பிற்கு எனக்கு எந்த ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ வழங்கப்படவில்லை.

ராப் பாடகர் அறிவு
ராப் பாடகர் அறிவு

இது அனுதாபத்திற்கான கோரிக்கை அல்ல. இது அங்கீகாரம், உரிமைகள் மற்றும் உழைப்பின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை.

சுயாதீன கலைஞர்களே உங்கள் படைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உங்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே வழக்கம்போல வெறும் கற்பனைதான். அதில் துளியும் உண்மையில்லை.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

நீங்கள் சொல்லும் கூற்றுகளுக்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் எடுத்து வரலாம்... எங்கு வேண்டுமானாலும், எந்த ஊடகத்தில் வேண்டுமானாலும் அதை விவாதிக்கலாம். என்னை எல்லா இடங்களிலும் பிளாக் செய்துவிட்டு இப்படிப் பேசுவதா? நீங்கள் இங்கேயேகூட பேசலாம். நான் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0