தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காக்ரோஜ் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜீத் திப்கே, ``நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்ய, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவர் ராஜினாமா செய்யாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் தொடங்கப்படும்.

அவர் பதவி விலகும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம். கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் நடத்திய போராட்டத்தைப் போன்றே, இந்தப் புதிய போராட்டமும் முன்னெடுக்கப்படும். இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், நாட்டின் மிகப்பெரிய தேசவிரோதி. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். நமது நாட்டில் ஜனநாயகம் என்பதற்கு என்ன அர்த்தம்?
மக்கள் தங்களது அரசைத் தேர்ந்தெடுப்பதுதான் ஜனநாயகம். ஆனால், ஞானேஷ் குமார் பொறுப்பேற்றது முதல், யார் வாக்களிக்க வேண்டும், யார் வாக்களிக்கக் கூடாது என்பதை அரசே முடிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இது என்ன மாதிரியான ஜனநாயகம்? ஜனநாயகத்தின் அடிப்படை இலக்கணத்தையே தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.
வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. 13 கோடி வாக்குகள் என்பன சிறிய எண்ணிக்கையல்ல. இது நாட்டின் மொத்த வாக்காளர்களில் சுமார் 13% முதல் 14% ஆகும். 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் என்.டி.ஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 2% மட்டுமே.

இந்த 2% இடைவெளியைச் செயற்கையாக அதிகரித்து, ஆளுங்கட்சி என்றென்றும் ஆட்சியில் நீடிப்பதற்காகவே ஞானேஷ் குமார் திட்டமிட்டு இந்த நீக்கங்களைச் செய்தாரா? 2024 தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை பெறத் தவறி 240 இடங்களுக்குச் சுருங்கியபோதே அவர்களுக்குப் பயம் தொற்றிக்கொண்டது.
நாட்டின் மனநிலை மாறுவதையும், மாநிலக் கட்சிகள் வலிமை பெறுவதையும் அவர்கள் உணர்ந்தனர். அதன் பின்னரே, ஒன்றிணைந்து களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையாகத் தோற்கடிக்கப்பட்டனர். மம்தா பானர்ஜியின் தொகுதியில் 50,000 வாக்குகள் நீக்கப்பட்டதால், அவர் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஸ்டாலினின் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அரவிந்த் கெஜரிவாலின் தொகுதியில் 40,000 வாக்குகள் நீக்கப்பட்டு, அவர் 4,000 முதல் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பினராயி விஜயன் வெற்றி பெற்றிருக்க வேண்டிய சூழலில், கேரளாவில் நடந்த வாக்காளர் நீக்கத்தால் அவராலும் மீண்டும் முதலமைச்சராக முடிவில்லை.
இந்தத் தோல்விகள் தற்செயலாக நடந்ததாகக் கருதமுடியாது. உத்தவ் தாக்கரேவின் கட்சி உடைக்கப்பட்டு, அதன் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் மிகச் சுறுசுறுப்பாகப் பறித்து, ஒரு 'ஷெல் கம்பெனி' போலச் செயல்பட்ட போலித் தரப்பிடம் வழங்கியது.

அத்துடன், ஆளுங்கட்சி அதிகாரத்தில் நீடிப்பதை உறுதிசெய்யத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டது. எங்களுக்கு எதிர்க்கட்சிகள் மீதோ அல்லது வேறு எந்தக் குறிப்பிட்ட கட்சி மீதோ தனிப்பட்ட பாசம் எதுவும் இல்லை. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிகளையே முழுமையாக அழித்துவிட்டால், அதை எப்படி ஜனநாயகம் என்று அழைக்க முடியும்? அது எப்படிச் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலாகும்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)