துபாய்: 64 மாடி கட்டடம், Rolls-Royce கார்; பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் இந்திய தொழிலதிபர்கள்

Mar 10, 2026 - 15:31
 0
துபாய்: 64 மாடி கட்டடம், Rolls-Royce கார்; பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவும் இந்திய தொழிலதிபர்கள்

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுத்து வரும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் துபாய், பஹ்ரைன், அபுதாபி, சவுதி அரேபியாவில் வசிக்கக்கூடிய 90 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேலை செய்த கம்பெனிகள் மூடப்பட்டதால் வேலையும் இல்லாமல் சாப்பாடும், பணமும் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இது தவிர சுற்றுலா, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக சென்ற இந்தியர்களும் நாடு திரும்ப முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு துபாயை சேர்ந்த இந்திய தொழிலதிபர் ஒருவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்ய முன்வந்து இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள்

யோகேஷ் தோஷி என்ற அத்தொழிலதிபர் அல் மிசான் என்ற நிறுவனத்தை துபாயில் நடத்தி வருகிறார். இவருக்கு துபாயில் 64 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் சொந்தமாக இருக்கிறது. அந்த முழு கட்டடத்தையும் துபாயில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்காக திறந்துவிட்டுள்ளார்.

இந்திய மக்கள் மன்றம் (IPF) மற்றும் இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்படும் இந்த முயற்சியால், ஹோட்டலில் அறைகள் இல்லாமல் தவித்த குழந்தைகள் உட்பட125-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மோஹித் வச்சானி, ரியா மகாடியா, பராஸ் பலோடியா மற்றும் கிரிஷ்மா பலோடியா ஆகியோர் கூறுகையில், ''ஹோட்டல் முன்பதிவுகள் முடிவடைந்துவிட்டதாலும், ஏற்கனவே தங்கி இருந்த ஹோட்டல்களில் முன்பதிவை நீட்டிக்க சாத்தியம் இல்லாததாலும் நாங்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டோம்.

பதற்றம் காரணமாக மொபைல் போன்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு எச்சரிக்கை வந்து கொண்டே இருந்தது. இது எங்களுக்கு பெரும் கவலை அச்சத்தை ஏற்படுத்தியது. எங்களைப் போன்று ஏராளமான இந்தியர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். எங்களுக்கு துபாயில் உள்ள 64 மாடிக் கட்டடத்தை யோகேஷ் தோஷி கொடுத்து இலவசமாக தங்கிக்கொள்ள சொல்லி இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளனர்.

துபாயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஜ்மானில் உள்ள ஒரு தங்குமிடத்திலும் பல இந்திய பயணிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த தங்குமிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் தீரஜ் ஜெயின் திறந்து வைத்துள்ளார்.

அவர் தனது பெரிய பண்ணை வீட்டை உடனடியாக வீடு திரும்ப முடியாத இந்தியர்களுக்காக தற்காலிக தங்குமிடமாக மாற்றியுள்ளார். அதோடு தங்குவதற்கு இடமின்றி தவித்த பயணிகளை அழைத்து வர 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உட்பட 11 வாகனங்களை அவர் அனுப்பியுள்ளார். அங்கு அவர்களுக்கு இலவச உணவும் தங்குமிடமும் வழங்கப்படுகிறது. சில இந்தியர்கள் இந்தியாவிற்கு அதிக கட்டணம் கொடுத்து வர ஆரம்பித்து இருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0