'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

Jul 18, 2026 - 13:02
0
'டிராக்டர் வாடகைய கொடுக்கல' - கணவனைத் தண்டிக்க மனைவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்

மகாராஷ்டிராவில் இப்போது பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உழவு பணிகளுக்கு அதிக அளவில் டிராக்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வாறு வாடகைக்கு எடுத்த டிராக்டருக்கான பணத்தைக் கொடுக்க தாமதமானதால் விவசாயி ஒருவரின் மனைவியை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பத்தேபூர் கிராமத்தில், விவசாயப் பணிகளுக்காக டிராக்டரை விவசாயி ஒருவர் வாடகைக்கு எடுத்தார். ஆனால் அந்த நபரால் சரியான நேரத்தில் டிராக்டருக்கான வாடகையைச் செலுத்த முடியவில்லை.

அதன் வாடகை நிலுவைத்தொகை ₹1 லட்சமாக உயர்ந்ததாகக் கூறி, அதை உடனடியாகத் திருப்பித் தருமாறு டிராக்டர் உரிமையாளர் வற்புறுத்தியுள்ளார்.

கைது
கைது

ஆனால் அவர் பணம் கொடுக்க கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டார். இதனால் அவரது மனைவியை டிராக்டர் உரிமையாளர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்துள்ள புகாரில், ''தனது கணவர் சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்திற்காகத் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் டிராக்டர் வாடகைக்கு எடுத்திருந்தார். டிராக்டர் உரிமையாளர், கடந்த சில மாதங்களாக டிராக்டர் வாடகை ₹1 லட்சமாக உயர்ந்துவிட்டதாகக் கூறி, அந்தப் பணத்தை உடனடியாகத் தருமாறு திடீரென வற்புறுத்தி வந்தார்.

சம்பவத்தன்று டிராக்டர் உரிமையாளர் எங்களது விவசாயி தோட்டத்திற்கு வந்தார். அங்கு நான் மட்டும் தனியாக இருந்தேன். அவர் எனக்கு சாப்பிட ஒரு தின்பண்டத்தைக் கொடுத்ததார். அதைச் சாப்பிட்ட பிறகு எனக்கு மயக்கம் ஏற்பட்டது'' என்றார்.

அதன் பிறகு, டிராக்டர் உரிமையாளர் தனது கூட்டாளிகள் மூன்று பேரை அந்த நிலத்திற்கு வரவழைத்ததாகவும், பின்னர் அந்த நான்கு பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடந்தபோது தனது கணவர் விவசாய நிலத்தில் இல்லை என்றும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பதற்கான துல்லியமான தேதியைக் குறிப்பிடவில்லை என்றும், சில வாரங்களுக்கு முன்பு தான் அவர் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் மிரட்டியதால், உடனடியாக போலீஸில் புகார் செய்யவில்லை என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் பத்தேபூர் பகுதியில் நடக்கும் இது போன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். ஜூன் 2-ஆம் தேதி ஜாம்னர் தாலுகாவில் 40 வயது பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜூன் 30 அன்று பத்தேபூர் போலீசார் 11 பேரைக் கைது செய்ததுடன் 3 சிறுவர்களையும் காவலில் எடுத்தனர்.

பாலியல் சீண்டல்
பாலியல் சீண்டல்

அன்று அந்தப் பெண்ணும் அவரது நண்பரும் ஒரு காட்டுப் பகுதியில் இருந்தபோது, அவர்களுக்குத் தெரிந்த 14 முதல் 15 பேர் கொண்ட கும்பல் அவர்களை மிரட்டியுள்ளது. அவர்களில் இரண்டு பேர் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய, மற்றவர்கள் அந்த கொடூரச் செயலை வீடியோ எடுத்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஜூன் 25 அன்று அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் கசியவிட்ட பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User