விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்ய சபா வருகை விவகாரம்: `சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல!' - அன்புமணி தரப்பு

Mar 11, 2026 - 19:01
 0
விமர்சிக்கப்பட்ட‌ ராஜ்ய சபா வருகை விவகாரம்: `சம்பளம் வாங்க மட்டுமே சபைக்கு போகல!' - அன்புமணி தரப்பு

தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டாக்டர் அன்புமணி. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என இருந்த நிலையில், ஒரு இடத்தை அன்புமணிக்கு வழங்கியது அந்தக் கட்சி.

விரைவில் டெல்லியில் ராஜ்யசபா உறுப்பினராக அன்புமணி பதவி ஏற்கவிருக்கும் சூழலில், "கடந்த முறை எம்.பி.யாக இருந்தபோது அவருடைய நாடாளுமன்ற வருகை மிகவும் மோசமானதாக இருந்தது. விவாதங்களில் கலந்துகொள்ள ஆர்வமே காட்டவில்லை; இந்த நிலையில் திரும்பவும் போகிறாரா?" என்கிற விமர்சனங்களும் ஒருபக்கம் கேட்கின்றன.

உறுப்பினர்கள் ஒவ்வொருவருடைய அவை வருகை குறித்த விவரங்கள் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கமான நடைமுறைதான். அப்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படியே அன்புமணியின் செயல்பாடு விமர்சனத்துக்கு உள்ளானது.

"மொத்த வருகைப் பதிவேட்டில் 15% மட்டுமே அவை செயல்பாடுகளில் பங்கேற்றுள்ளார். அதேபோல் 2 விவாதங்களின்போது மட்டுமே அவையில் இருந்துள்ளார். அப்போதும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. தவிர, எந்தவொரு தனிநபர் மசோதாவையும் கொண்டுவரவில்லை" என்பதுதான் அவர் தொடர்பாக ராஜ்யசபா தளத்தில் வெளியான தகவல்.

Anbumani ramadoss

பாட்டாளி மக்கள் கட்சியின் ஊடகத் தொடர்பாளர் வினோபா பூபதியிடம் இந்த வருகைப் பதிவேடு புள்ளிவிவரம் குறித்துக் கேட்டோம்.

"விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரி கிசான் திட்டம் தொடர்பான கேள்வியை விவசாய அமைச்சகத்திடம் கேட்டிருக்கிறார். கடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறித்த ஆய்வுகள் தொடர்பான கேள்வியை நீர்வளத்துறையிடம் கேட்டிருக்கிறார். உரத் தட்டுப்பாடு குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்துக் கோரிக்கை விடுத்ததா என்கிற கேள்வியைக் கேட்டிருக்கிறார். தேசிய விவசாய ஆராய்ச்சிக் கவுன்சிலின் தென் பிராந்தியத் தலைமையகம் தஞ்சாவூரில் அமைக்கப்படுமா என்று கேட்டிருக்கிறார்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், அந்த இடம் தேர்வுசெய்யப்படுவதற்கு முன் நிகழவிருக்கும் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டதா, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அறிக்கை பெறப்பட்டதா என்றெல்லாம் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்குக் கேள்விகள் கேட்டிருக்கிறார்.

'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்று சொல்வார்களே, அதைப் போல நான் இங்கே குறிப்பிட்டவையெல்லாம் மாதிரிகள்தான். இன்னும் ஏராளமான கேள்விகள் பல அமைச்சகங்களிடம் கேட்டிருக்கிறார். எல்லாமே தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்னைகள் தொடர்பான விஷயங்கள்தான்."

நாடாளுமன்றம்

"அவர் கலந்துகொண்ட விவாதங்கள் தொடர்பாகவும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான ஒரு விவாதத்தில் அவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுடனேயே வாதிட்டிருக்கிறார். மத்திய அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்படுவது குறித்து தெளிவான ஒரு உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

ஊடகங்கள், குறிப்பாக தமிழ் ஊடகங்கள், அவருடைய இந்தப் பங்களிப்பு குறித்து எதையும் வெளியிட மறந்துவிடுகின்றன என்பது புரியவில்லை.

வருகைப் பதிவு முக்கியமில்லை என்று நாங்கள் சொல்ல வரவில்லை. அதே நேரத்தில், அவை நடவடிக்கை மற்றும் விவாதங்களில் கலந்துகொள்பவர்கள் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகிறார்கள், மற்றவர்கள் அப்படியில்லை என்கிற கருத்து தவறானது என்று சொல்கிறோம். அரசியல்வாதிகளுக்குக் களத்தில்தான் வேலை அதிகம் இருக்கும். தவிர, இவர் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் கட்சிப் பணிகளும் இருக்கும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லையா?" என்றவர்,

கலைஞர் கருணாநிதி

``எதிர்கட்சி வரிசையில் இருக்கிற கட்சிகள் சமயங்களில் அவையையே ஒழுங்கா நடக்க விடறதில்லையே, அப்பெல்லாம் யாரைக் குற்றம் சாட்டுவது? தமிழ்நாட்டுல திமுக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதெல்லாம் அதன் தலைவரா இருந்த கலைஞர் சட்ட சபைக்கே வந்ததில்லை. சம்பளம் வாங்க கையெழுத்திடறதுக்கு மட்டும்தான் வந்திருக்கார். இதையெல்லாம் மறந்துட்டவங்கதான் இப்ப அன்புமணி ராமதாஸை விமர்சிச்சிட்டிருக்காங்க' என முடித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0