வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

Apr 6, 2026 - 12:01
 0
வங்கதேச எல்லையில் தொடரும் ஊடுருவல்; பாம்பு, முதலைகளைப் பயன்படுத்தப்போகும் எல்லைப் பாதுகாப்புப் படை

பங்களாதேஷில் இருந்து அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எல்லைப் பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

ஊடுருவல்காரர்கள் பிரச்னை மேற்கு வங்க தேர்தலில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. பங்களாதேஷுடன் இந்தியா 4,096 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதில் 175 கிலோமீட்டர் தூரம் ஆற்றங்கரையைக் கொண்டது ஆகும். இவ்வளவு தூரத்திற்கு வேலி அமைப்பது என்பது முடியாத காரியமாக இருக்கிறது. இதனால் பாதுகாப்பு குறைவாக இருக்கும் இடத்தில் ஊடுருவல் அதிக அளவில் நடந்து வருகிறது.

எனவே ஊடுருவலைக் கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படையினர் மாற்று வழியைத் தேட ஆரம்பித்துள்ளனர். அதிக அளவில் ஆறு மற்றும் அதனையொட்டிய சதுப்பு நிலப்பகுதி வழியாக இது போன்ற ஊடுருவல் நடப்பதால் அப்பகுதியில் பாம்பு மற்றும் முதலைகளை அதிக அளவில் விட்டு இந்த ஊடுருவலைக் கட்டுப்படுத்துவது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் பரிசீலித்து வருகின்றனர்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் பரிசீலனை மட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் இதனை அமல்படுத்தலாம் என்பதில் எல்லை பாதுகாப்புப் படையினர் உறுதியாக இருக்கின்றனர்.

மற்ற பகுதியில் ட்ரோன்கள், சென்சார்கள், கேமராக்கள் மற்றும் பிற நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு எல்லைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊடுருவல் மட்டுமல்லாது கடத்தல் சம்பவங்களும் எல்லையில் அதிக அளவில் நடக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரியில், தெற்கு வங்க எல்லைப் பாதுகாப்புப் படையின் 32வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் நடத்திய ஒரு அதிரடி நடவடிக்கையில், ஒரு தங்கக் கடத்தல்காரரை இடைமறித்து, சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

கடந்த நவம்பரில் நாடியா மாவட்டத்தில் எல்லை தாண்டிய கடத்தல் முயற்சியைத் தடுக்க எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் முயன்றபோது, ​​ஒரு வங்கதேசக் கடத்தல்காரர் தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கடத்தல்காரர்கள் உள்ளூர் ஆயுதங்களைக் கொண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதன் விளைவாகத் தவறுதலாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அதில் ஒரு கடத்தல்காரர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0