கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்: எளிய மக்களுக்கு நீதி அருளும் தலம்!

May 25, 2026 - 08:01
0
கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்: எளிய மக்களுக்கு நீதி அருளும் தலம்!

அம்மன் ஆலயங்கள் பலவும் எளிய மக்களின் குறைதீர்க்கும் தலங்களாகவே திகழ்கின்றன. மனிதர்களை நம்பி ஏமாந்தவர்கள் தெய்வத்திடம்தானே சரணடைய வேண்டும்... அப்படி தன்னை நம்பி வரும் மக்களின் துயர்தீர்த்து அவர்களுக்கு நீதி வழங்கும் தேவதையாக அருள்கிறாள் வனபத்ரகாளி.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பவானி ஆற்றங்கரையில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது அவள் கோயில்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து 6 கி.மீ. பயணித்தால் தேக்கம்பட்டியை அடையலாம். மலைகள் சூழ்ந்த இயற்கையின் தாய்மடியில் அன்னை கோயில்கொண்டு அருளும் தலத்தை அடைந்தாலே மனதின் பாரங்கள் எல்லாம் நீங்கிப்போய்விடும் என்கிறார்கள் பக்தர்கள்.

தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்
தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்

மகிஷாசுரனை ஆதிபராசக்தி அழித்துவிட்டு, தனது ஆங்காரம் நீக்க இந்த அடர்ந்த வனத்தில் நீண்ட காலம் தவம் இருந்தாள். அங்கு மகிஷனால் பாதிக்கப்பட்ட சகலரும் வந்து தேவியை வணங்கி நிவாரணமும் நீதியும் வேண்டிப்பெற்றார்கள் என்கிறது தலவரலாறு.

அடர்ந்த வனத்தில் அன்னை தவம் இருந்ததால் வனபத்ரகாளி என்றானாள். இந்த ஆலயம் மகாபாரதக் கதையோடு தொடர்பும் கொண்டது என்கிறார்கள் பக்தர்கள்.

ஆரவல்லி, சூரவல்லி அரசிகள் இந்தப் பகுதியை ஆட்சி செய்துவந்தார்கள். அவர்கள் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை கொண்டு மக்களை அடக்கி, மற்ற மன்னர்களையும் அடிமைப்படுத்தி, கொடிய ஆட்சி செய்துவந்தனர்.

ஒருமுறை பாண்டவர்களில் ஒருவரான பீமனையே சிறை செய்தும் வைத்தனர். கிருஷ்ண பரமாத்மா பீமனை மீட்டார் என்கிறது பாரதம். பிறகு பாண்டவர்களின் தங்கை மகன் அல்லிமுத்து, தனது சாமர்த்தியத்தால் ஆரவல்லி சூரவல்லியை அடக்கி ஒடுக்கி மலையாள தேசத்துக்கு விரட்டினான் என்கிறது புராணம்.

அல்லிமுத்துக்கு மந்திர தந்திர மாயங்களைக் கற்றுக் கொடுத்து வெற்றியை அளித்தவள் இந்தத் தேக்கம்பட்டி வனபத்ரகாளி என்கிறார்கள். அல்லிமுத்து உள்ளிட்ட பாண்டவர்கள் யாவரும் இங்கு வந்து தேவியை வணங்கினார்கள் என்றும் தலவரலாறு கூறுகிறது.

இன்றும் தாங்கள் ஏதேனும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோமோ என்று அச்சம் கொள்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தீமைகள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை. கண் திருஷ்டி, தீய கனவுகளால் துன்பப்படுவர்களும் இங்கு வந்து ஆறுதல் கொள்கிறார்கள்.

தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்

வனபத்ரகாளி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். கோவை வட்டாரத்தில் யார் புதிதாக வாகனம் வாங்கினாலும் இங்கு வந்து பூஜை செய்த பிறகே அதைப் பயன்படுத்துகிறார்கள். விபத்துகளிலிருந்து காப்பதிலும் இந்த தேவி கருணை மிக்கவள் என்கிறார்கள்.

பகாசுரன், பீமன் ஆகியோரின் பிரமாண்ட வடிவங்கள் காவல் சிலைகளாக உள்ளன. குந்தி தேவி ஒரு குழந்தையுடன் காணப்படும் மூர்த்தமும் உள்ளது. பவானி ஆற்றின் படித்துறையில் விநாயகர் சந்நிதி உள்ளது.

இவர் சாட்சி சொல்லும் கணபதி என்கிறார்கள். இவரிடம் உங்கள் குறைகளைச் சொன்னால், அவர் தேவியிடம் சாட்சி சொல்வாராம். பவானி ஆற்றில் வெற்றிலைமீது கற்பூரத்தை ஏற்றி ஆற்றில் விடுவது ஒரு வழக்கமாக இங்கே கடைப்பிடிக்கப்படுவது சிறப்பு.

இந்த ஆலயத்தின் விசேஷம் என்னவென்றால் அது பூ வைத்துப் பார்ப்பதுதான். இந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள், புதிதாக எந்த முடிவெடுத்தாலும், புதிதாக எதைத் தொடங்கினாலும் அதை இந்த வனபத்ரகாளிக்கும் முன்னால் பூ வைத்துப் பார்த்தபிறகே முடிவு செய்வார்கள்.

வரன் தேர்ந்தெடுப்பது, என்ன விதைப்பது என்று எல்லாவற்றுக்கும் இந்தக் காளிமீது பாரத்தைப் போட்டுவிட்டே முடிவு செய் கிறார்கள். சிவப்பு, வெள்ளைப் பூக்களைத் தனித்தனிப் பொட்டலங்களில் போட்டு, அவற்றை காளியின் காலடியில் போட்டு ஒன்றை எடுப்பார்கள்.

நாம் எந்தப் பூவை மனதில் நினைத்தோமோ அந்தப் பூ வந்துவிட்டால் காளி உத்தரவு தந்துவிட்டதாக நம்புகிறார்கள். அந்த உத்தரவை அவர்கள் மீறுவதே இல்லை.

தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்
தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்

தல விருட்சமான தொரத்தி மரத்தின் நுனியில், கல்லை வைத்துத் தொட்டில் கட்டினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குண்டம் இறங்கல் என்னும் தீமிதி திருவிழா இங்கு மிகவும் விசேஷமானது. வேண்டிக்கொண்டு பூக்குழிக்குள் இறங்கினால் அடுத்த ஆண்டுப் பூக்குழிக்குள் காளி நிறைவேற்றித் தந்திடுவாள் என்கிறார்கள் பக்தர்கள்.

ஆடி செவ்வாய் கிடா வெட்டு இந்த வட்டாரத்திலேயே பிரபலம். வேண்டிய வரம் கிடைத்தவுடன் எலுமிச்சை மாலை சார்த்துவதும், மாங்கல்ய பாக்கியம் கிடைத்ததும் தாலியை அர்ப்பணிப்பதும் இங்கு முக்கிய வேண்டுதலாக உள்ளன.

பாதிக்கப்பட்ட எளிய மக்கள், இங்கு வந்து எலுமிச்சை தீபம் ஏற்றி கண்ணீர் வடிய வேண்டி நின்றால், அந்த அநீதிக்கு தக்க தண்டனை வழங்குவாள் என்கிறார்கள். துடியான இந்தக் காளியிடம் எவருமே தப்ப முடியாது. தன் பக்தர்களைக் கலங்க வைப்பவர்கள் யாரானாலும் மிகக் கடுமையாக தண்டித்துவிடுவாள் என்று சிலிர்ப்போடு கூறுகிறார்கள்.

அநியாயமாக ஏமாற்றப்பட்டோமே என்று தவித்துக்கொண்டிருக்கிறீர்களா, இந்தக் காளியிடம் உங்கள் வேண்டுதலை வைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள். நிச்சயம் உங்களுக்கு இவள் நீதியை வழங்குவாள்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் வனபத்ரகாளியை ஒருமுறை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User