பெங்களூரு: 'போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது' - 94 வயது முதியவர் ரூ.5 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

Mar 11, 2026 - 12:31
 0
பெங்களூரு: 'போலி CBI, 69 நாள் டிஜிட்டல் கைது' - 94 வயது முதியவர் ரூ.5 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

நாட்டில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் கும்பங்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் தனி சைபர் பிரிவு போலீஸ் படையை உருவாக்கி இருக்கிறது. ஆனாலும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெங்களூரைச் சேர்ந்த 94 வயது முதியவர் தனது வாழ்நாள் சேமிப்பான ரூ.5 கோடியை இது போன்ற ஒரு சைபர் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். பெங்களூரு ரிச்மண்ட் டவுனைச் சேர்ந்த 94 வயது ஆராய்ச்சியாளர், டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 69 நாட்களில் சுமார் 5 கோடி ரூபாயை இழந்தார்.

விசாகன் என்ற அந்த நபரின் மனைவியும் ஒரு விஞ்ஞானி ஆவார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாகனுக்குக் கடந்த டிசம்பர் மாதம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, தன்னை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி என்று கூறி பேசினார்.

சைபர் குற்றம்
சைபர் குற்றம்

அதில் பேசிய நபர், முதியவர் மீது பெல்லாரியில் ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், உங்களை இன்ஸ்பெக்டர் தொடர்பு கொள்வார் என்று கூறிவிட்டு போனைத் துண்டித்துவிட்டார்.

இதனால் முதியவர் குழப்பமும், அச்சமும் அடைந்தார். மற்றொரு நபர் முதியவரைத் தொடர்பு கொண்டு, சிபிஐ அதிகாரி சந்தீப் ராவ் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் ஆதார் கார்டு நகலை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். முதியவர் ஆதார் கார்டை அனுப்பியவுடன் போலி எப்.ஐ.ஆர். நகல் ஒன்றை முதியவருக்கு அனுப்பி வைத்தனர்.

மோசடி பேர்வழிகள் முதியவரை டிஜிட்டலில் கைது செய்தனர். மேலும் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்றும், இது குறித்து யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.

பல மொபைல் எண்களில் இருந்து வீடியோ கால் செய்தார்கள். அழைப்புகளின் போது, ​​சிபிஐ அலுவலகம் போன்று வடிவமைக்கப்பட்ட அறையில் போலிஸ் சீருடை அணிந்து இருந்த நபர்களை விசாகன் பார்த்தார்.

விசாகன் தான் நிரபராதி என்றும், தனக்கும் ஆள் கடத்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் மோசடிக்காரர்களிடம் தொடர்ந்து விளக்கமளித்தார். ஆனால், அவர்கள் அவருக்கு உதவுவது போல நடித்தே அவரை நம்பவைத்தனர்.

இந்த வழக்கு மிகவும் தீவிரமானது என்றும், இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் கூறி அவரை மேலும் பயமுறுத்தியுள்ளனர். அதோடு தங்களுக்கு ஒத்துழைத்தால், இந்த விவகாரத்தைத் தீர்த்துவிடலாம் என்று ஆசை காட்டியுள்ளனர்.

இந்த மிரட்டல்களால் நிலைகுலைந்த முதியவரிடமிருந்து அவரது வங்கி விவரங்களைச் சேகரித்த மோசடிக்காரர்கள், அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

Digital Arrest
Digital Arrest

இதனால் டிசம்பர் 17 முதல் பிப்ரவரி 23 வரை, முதியவர் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 4.9 கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்தார். அவரது மனைவியுடன் சேர்ந்து எடுத்திருந்த வைப்புத்தொகை ரூ.92 லட்சத்தையும் அனுப்பி வைத்தர.

அனைத்து பரிவர்த்தனைகளும் RTGS மூலம் செய்யப்பட்டன. அப்படி இருந்தும் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தனர். தனது சேமிப்பு அனைத்தும் தீர்ந்த பிறகு முதியவர் தனது நண்பரிடம் கடன் கேட்கச் சென்றபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். இதையடுத்து மார்ச் 8-ம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணத்தை முடக்க (Freeze) போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0