எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

Mar 20, 2026 - 11:01
 0
எ.வ.வேலு ஸ்கெட்ச் ; வளைத்து இழுக்கும் அறிவாலயம் - நழுவும் செம்மலை!

தி.மு.க-வுக்கு வரும் அ.தி.மு.க-வினர்:

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் முக்கிய தலைவர்கள், அதிருப்தியில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது, சேர்வது வழக்கமான ஒன்று. ஆனால், யாரும் யோசித்துக் கூட பார்த்திடாத வகையில் இந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பல சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது.

உதாரணமாக அரைநூற்றாண்டு அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஓ.பி.எஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தொடர்ச்சியாக திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்

எல்லாவற்றுக்கும் உச்சமாக, மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

சமீபத்தில் கூட, நூற்றுக்கணக்கான அதிமுக வழக்கறிஞர்கள் திமுகவில் இணைந்தார்கள். தொடர்ச்சியாகப் பலரும் திமுகவில் இணைந்துவரும் நிலையில் இப்போது அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செம்மலை திமுகவில் இணைய இருப்பதாகச் செய்திகள் கசிந்தன.

செம்மலையை இழுக்கும் வேலு:

இந்த விவகாரம் குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். "கடந்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டுமே திமுக கைப்பற்றியது. இந்த முறை சேலத்திலிருந்து கூடுதல் இடங்களைப் பெறவேண்டும் என திமுக தலைமை உறுதியாக இருக்கிறது.

அதற்காகச் சேலம் மண்டல பொறுப்பாளராக மூத்த அமைச்சர் எ.வ. வேலுவை களமிறங்கியது திமுக தலைமை. கடந்த சில மாதங்களாகச் சேலத்துக்குச் சிறப்புக் கவனம் செலுத்திவரும் வேலு, கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்தும் வேலைகளையும் செய்துவந்தார். இருந்தபோதிலும், சேலத்தில் திமுகவின் கை சற்று தொங்கிய இருந்தது. கண்டிப்பாக அடித்துக் காட்டுவேன் என்று தலைமையிடம் வேலு உறுதியளித்திருந்த நிலையில், வெற்றிக்கான சில வேலைகளையும் பார்க்கத் தொடங்கினர்.

அமைச்சர் எ.வ.வேலு

கடந்த சில மாதங்களாக அதிமுகவினர் தொடர்ச்சியாக திமுகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும், சேலம் பகுதியைச் சேர்ந்தவருமான முன்னாள் அமைச்சர் செம்மலையை திமுக பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் இறங்கியிருந்தார் வேலு.

காரணம் சேலம் பகுதியில் செம்மலை சார்ந்த வன்னியர் பகுதியில் அவருக்கென்ற தனியொரு செல்வாக்கு படைத்தவர் செம்மலை. அவரை மேட்டூர் தொகுதியில் களமிறக்கினால் மேட்டூர் மட்டுமன்றி இன்னும் மூன்று தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் வரக்கூடும். இதனால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று எண்ணி முயற்சியில் இறங்கினார். ஓ.பி.எஸ் தொடங்கி பலரும் முயற்சி செய்திருந்த நிலையில் அவர் திமுகவுக்கு இசைவு கொடுக்கவில்லை" என்றார்கள் விரிவாக.

செம்மலை பின்னணி :

செம்மலை குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம், "சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளிலிருந்தவர் செம்மலை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில், அனைத்து எம்.எல்.ஏ-களிடமும் எடப்பாடியை முதலமைச்சராக்கக் கையெழுத்துப் போடச்சொல்லப்பட்டது. அனைவரும் சரி என்று சொன்ன நிலையில் முதல் ஒரு ஆளாக `என்னால் முடியாது' என்று கிளம்பிய நபர் செம்மலை. அந்த ஒரு காரணத்தினாலேயே கடந்த சட்டமன்ற தேர்தலில் செம்மலைக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் செய்திகள் பரபரத்தன.

செம்மலை

எப்படியும் இந்த தேர்தலிலும் நமக்கு வாய்ப்பு கொடுக்கமாட்டார் அல்லது நாம் கேட்கும் தொகுதியை வழங்கமாட்டார் என்று செம்மலை உணர்ந்த காரணத்தினாலேயே இம்முறை அவர் விருப்ப மனு கூட வழங்கவில்லை.

திமுக முகாமுக்கு அவரை இழுக்கப் பலரும் பலகட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியிருந்தார்கள். அதிமுக தலைமை மீது அதிருப்தி இருந்தாலும், அவருக்கு அந்த கட்சியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. திமுகவுக்குச் செல்கிறார், இணைகிறார் என்று செய்திகள் பெருமளவில் பேசுபொருளாலான நிலையில் தான் அவரே, ``நான் திமுகவுக்கு போகவில்லை என்று விளக்கமும் கொடுத்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்" என்றார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0