தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

Mar 22, 2026 - 13:31
 0
தாக்கி வீடியோ எடுத்து மிரட்டல்; தற்கொலை செய்த அதிகாரி: பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் ராஜினாமா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் மாநில அரசு கிடங்கில் மாவட்ட மேலாளராக இருந்த ககன்தீப் சிங் நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் அமைச்சர் லால்ஜித் சிங் அச்சுறுத்தியதால் நான் விஷம் குடித்துவிட்டேன். இனி நான் பிழைக்கமாட்டேன் என்று அதில் ககன்தீப் குறிப்பிட்டு இருந்தார்.

இத்தற்கொலை குறித்து ஆரம்பத்தில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. நேற்று இரவு அமிர்தசரஸில் உள்ள ரஞ்சித் அவென்யூ காவல் நிலையத்தில் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், அவரது தந்தை மற்றும் உதவியாளர் தில்பாக் சிங் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வீடியோ வெளியானது மற்றும் ககன்தீப் தற்கொலை செய்ததை தொடர்ந்து முதல்வர் பகவந்த் மான் அமைச்சர் லால்ஜித் சிங்கை அழைத்து இது குறித்து விசாரித்தார். மேலும் இப்பிரச்னை நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதால் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். உடனே அமைச்சர் லால்ஜித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில், அமைச்சர் லால்ஜித் சிங் தனது தந்தை சுக்தேவ் சிங் புல்லருக்கு ஒரு கிடங்கு டெண்டரை ஒதுக்குமாறு ககன்தீப்பிற்கு லால்ஜித் சிங் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ககன்தீப் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து கடந்த 13ம் தேதி அமைச்சரின் இல்லத்திற்கு ககன்தீப் வரவழைக்கப்பட்டு, அங்கு அவர் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக"பொய் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும் ககன்தீப் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆனால் இக்குற்றச்சாட்டை லால்ஜித் சிங் மறுத்துள்ளார். நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு தன் மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் பொய்யானது என்று குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,''எங்கள் கட்சி எப்போதும் உண்மைக்கு ஆதரவாக நிற்கிறது. நியாயமான விசாரணையை உறுதி செய்வதில் எனது பதவி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக எனது ராஜினாமாவை ஏற்குமாறு எனது கட்சியையும் முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன். உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். ஆனால் இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பர்தாப் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "லால்ஜித் சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து லால்ஜித் சிங் புல்லரை கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0